மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்களின் கட்டாய ஒப்பந்த காலம் இரண்டு ஆண்டுகளிலிருந்து ஓராண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள இச்செய்தியில், அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் அரசு சாரா மருத்துவர்களுக்கு கட்டாய ஒப்பந்த காலம் ஓர் ஆண்டுக்கு குறைக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு மருத்துவ மாணவர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. மேலும், எம்டி/எம்எஸ் உள்ளிட்ட மருத்துவ பட்ட மேற்படிப்பு பயிலும் மருத்துவர்கள் இரண்டு ஆண்டுகள் பயிற்சி மருத்துவர்களாக கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது விதியாக இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர், மருத்துவ பணிகள் இயக்குனர் உள்ளிட்ட மருத்துவத்துறையின் உயர் அதிகாரிகளுடன் அரசு மருத்துவர்கள் சங்கம், அரசு சாரா மருத்துவர்கள் சங்கம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஆலோசனை நடந்து முடிந்த பின், 2 ஆண்டுகளாக இருந்த அரசு சாரா ஒப்பந்த பணியை ஓராண்டாக குறைத்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆண்டுக்கு 700 முதுநிலை பட்டதாரி மருத்துவர்கள் ஒப்பந்த அடிப்படையில் அரசு சாரா பணியில் சேருகின்றனர். ஒப்பந்த பணிக்காலத்தை குறைத்ததன் மூலம் தமிழக மருத்துவர்களுக்கு அதிக பயன் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.