இந்தியாவின் தோல்வியை கொண்டாடி பதிவு! மருத்துவ கல்லூரி ஊழியர் பணி நீக்கம்!
தற்போது நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற லீக் ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் இந்தியாவை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அபார வெற்றியை அடைந்தது.
டி20 உலக கோப்பையில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் வெற்றி பெற்றதன் காரணமாக பாகிஸ்தான் ரசிகர்கள் இதை திருவிழாவாக கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தின் மூலம் இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் கருத்து மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
இதற்கிடையில் டி20 உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்ததை இந்தியாவில் சிலர் கொண்டாடிய சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவ்வாறு கொண்டாடியவர்களில் சிலர் கைது நடவடிக்கையை சந்தித்து உள்ளனர்.
இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஒன்றின் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றி வருபவர் சோபியா மஜித். இவர் உலக கோப்பையில் பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வி அடைந்ததை கொண்டாடும் விதமாக, தனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் ஆக அந்த வீடியோவை வைத்துள்ளார்.
அந்த ஸ்டேட்டஸ் மருத்துவக் கல்லூரியில் உடன் பணியாற்றும் சக ஊழியர்களும் பார்த்துள்ளனர். மேலும் இது குறித்து மருத்துவ கல்லூரியின் முதல்வருக்கும் தெரியப்படுத்தப்பட்டது. அதன் காரணமாக தேசத்தின் மீதான துரோகத்தை வெளிப்படுத்தும் செயல் புரிந்த காரணத்தினால் அந்த வீடியோவை பதிவிட்ட சோபியா மஜீத் தொழில்நுட்ப பிரிவு பணியிலிருந்து நீக்குவதாக ரஜோரி மருத்துவக் கல்லூரி தலைவர் உத்தரவிட்டுள்ளார்.