Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கில் என்னென்ன தளர்வுகள்.!! எதெற்கெல்லாம் தடை.?

தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கு கட்டுப்பாடுகளில், மேலும், சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, வரும் நவம்பர் 15ஆம் தேதி வரை ஊரடங்கு கட்டுப்பாடுகள் நீட்டிக்க படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நவம்பர் 15ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது. தற்போது பண்டிகை காலம் என்பதால் அதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்படுகின்றன. அதனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் கண்டிப்பாக முககவசம், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

தடை

திருவிழாக்கள் மற்றும் அரசியல் நிகழ்வுகளுக்கு நடைமுறையிலுள்ள தடை தொடரும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

அனுமதி

அனைத்து வகை கடைகள் மற்றும் உணவகங்கள் இரவு 11 மணி வரை செயல்பட அனுமதி.

தியேட்டர்கள் 100% பார்வையாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதி. மேலும், அனைத்து கலாச்சார நிகழ்ச்சிகளும் நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்துப் பள்ளிகளிலும், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி.

அனைத்து வகை உள் மற்றும் வெளி விளையாட்டு மைதானங்களில் பயிற்சிகள், விளையாட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி. மேலும், சிகிச்சை தேவைகளுக்காக நீச்சல் குளங்களை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திற்குள்ளேயும், மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு (கேரளா தவிர) இடையேயும் சாதாரண மற்றும் குளிர்சாதன பொது பேருந்து போக்குவரத்து 100% பயணிகளுடன் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே, அனுமதிக்கப்பட்டுள்ள மது கூடங்களுடன், அனைத்துவகை தனித்து இயங்கும் மதுக்கூடங்களும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version