பணப்புழக்கத்தை அதிகரிக்க ரிசர்வ் வங்கி வழங்கும் சலுகை
கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக நாடுகள் அனைத்தும் கடும் பொருளாதார இழப்பினை சந்தித்து வருகின்றன. இவ்வாறு உலகில் ஏற்பட்டுள்ள அசாதாரண பொருளாதார சூழ்நிலை காரணமாக நிலைமையை சமாளிக்க பல்வேறு உலக நாடுகளின் மைய வங்கிகள் வட்டி விகிதங்களை குறைத்து வந்தன. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கியும் கடந்த மார்ச் மாதம் 27 ஆம் தேதி வங்கிகளுக்கான கடன் வட்டி விகிதங்களை குறைப்பதாக அறிவித்தது.
இந்த அறிவிப்பின் படி ரெப்போ விகிதம் 4.40 சதவீதமாகவும், ரிவர்ஸ் ரெப்போ விகிதம் 4 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இந்த வட்டி குறைப்பு சலுகையை வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் வீடு மற்றும் வாகன கடன் வட்டி விகிதங்கள் குறைய வாய்ப்பு இருக்கிறது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர் .
இந்நிலையில், வங்கிகள் ரிசர்வ் வங்கியில் செலுத்தும் டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதமான ரிவர்ஸ் ரெப்போ ரேட் 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து அந்த வட்டி விகிதம் 3.75 சதவீதமாக குறைந்துள்ளது. அதே சமயம் வங்கிகள் பெறும் கடனுக்கான வட்டி விகிதமான ரெப்போ ரேட்டில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. எனவே அது தற்போது 4.40 சதவீதமாக தொடர்கிறது.
இதுதவிர வேறு சில முக்கிய நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து உள்ளது. அதில் குறிப்பாக நபார்டு என்ற தேசிய வேளாண்மை மற்றும் ஊரக அபிவிருத்தி வங்கி, சிட்பி என்ற இந்திய சிறு தொழில்கள் அபிவிருத்தி வங்கி, தேசிய வீட்டு வசதி வங்கி போன்ற மத்திய அரசின் நிதி நிறுவனங்களுக்கு ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் வழங்குகிறது. பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள இந்த சூழ்நிலையில் ரிசர்வ் வங்கி வழங்கும் இந்த கடன் உதவி நாட்டில் பணப்புழக்கத்தை அதிகரிக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.