சென்னையில் இதற்கெல்லாம் தடை! காவல் ஆணையர் உத்தரவு!

0
131

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு தடைகளை விதித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. பின்னர், மத்திய மற்றும் மாநில அரசுகள் ஊரடங்கில் அவ்வபோது சில தளர்வுகளை அறிவித்து வந்தது. அதன்படி, நாடு முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் சென்னையில் பல்வேறு தடைகளை விதித்து மாநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து, சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு தனிமைப்படுத்துதல் மற்றும் சமூக இடைவெளி ஏற்படுத்துதலை வலியுறுத்தி தொற்று நோய் சட்டம் மற்றும் 144 (4) குற்றவியல் நடைமுறைச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் 5 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்படுகிறது. ஏற்கெனவே, இந்த தடை உத்தரவு அக். 31ம் தேதி வரை அமலில் இருந்தது. மத்திய உள்துறை அமைச்சகம் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக, தடை உத்தரவை மேலும் ஒரு மாதம் நீட்டிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, பொது இடங்களில் 5க்கும் மேற்பட்ட நபர்கள் கூட நவ. 30ம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தடை விதிக்கப்படுகிறது. மீறுபவர்கள் இந்திய தண்டனைச் சட்டத்தின்கீழ் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவர். இந்த ஆணை பொது மக்கள் நலன், பாதுகாப்பு மற்றும் பொது அமைதியை நிலை நாட்டும் பொருட்டு தற்போது பிறப்பிக்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்றொரு உத்தரவில், தமிழ்நாடு நகர காவல் சட்டம் 41 வது பிரிவின்படி, சென்னை மாநகர காவல் எல்லையில் சிலகட்டுப்பாடுகள் நவம்பர் 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை விதிக்கப்படுகிறது. அதன்படி, பொது இடங்கள், போக்குவரத்து நெரிசல்மிக்க பகுதிகளில் போராட்டங்கள், உண்ணாவிரதங்கள், மனித சங்கிலி, கூட்டம், பேரணி ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.