மழை நீரில் நெல்மணிகள் நனையும் அவலம்! கொள் முதல் நிலையம் இல்லாமல் விவசாயிகள் வேதனை!
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே மேல்மங்கலம் பகுதியில் ஒவ்வொரு ஆண்டும் அறுவடை காலம் தொடங்கும் நேரத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் அறுவடை செய்து கொண்டு வரும் நெல்மணிகளை நேரடியாக அரசு அலுவலர்கள் கொள்முதல் செய்து வந்தனர். இந்த நிலையில், மேல்மங்கலம், வடுகபட்டி, ஜெயமங்கலம், சில்வார் பட்டி, பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் , தங்கள் வயல்களில் விளைந்த நெல் மணிகளை அறுவடை செய்து மேல்மங்கலத்தில் நெல் கொள்முதல் நிலையம் இயங்கி வந்த இடத்தில் குவியலாக கொட்டி வைத்துள்ளனர். நெல்மணிகளை ஒரு வாரமாக கொட்டி வைத்து விட்டு வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாப்பதற்கே விவசாயிகள் பெரும்பாடு படுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் அலட்சியம் : கடந்த சில தினங்களுக்கு முன்பு மேல் மங்கலம் பகுதியில் நெல் கொள் முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்ததாக செய்தித்தாள்களில் செய்தி வெளியாகியிருந்தது. அந்த செய்தியை கருத்தில் கொண்டு உடனடியாக நெல் கொள்முதல் நிலையம் அமைத்து விடுவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த விவசாயிகளின் கனவு பகல் கனவாக நிறைவேறாமலேயே நிற்கிறது.
கொள்முதல் நிலையம் அமைக்காததால், குவியலான வைக்கப்பட்டிருக்கிற நெல்மணிகள் மழையில் நனைந்துள்ளது. மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளும் அலட்சியப் போக்கை விடுத்து, உடனடியாக நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து, விவசாயிகளிடமிருந்து நெல்மணிகளை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.