Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஸ்டாலினை கலாய்த்து வீடியோ வெளியிட்ட RJ விக்னேஷ் தாக்கப்பட்டாரா?

RJ Vignesh Threatened By Politicians-News4 Tamil Latest Online Tamil News

RJ Vignesh Threatened By Politicians-News4 Tamil Latest Online Tamil News

ஸ்டாலினை கலாய்த்து வீடியோ வெளியிட்ட RJ விக்னேஷ் தாக்கப்பட்டாரா?

சமூக வலைத்தளமான யூடுப் சேனல் மூலமாக நகைச்சுவைக்காக நடிகர்கள் அரசியல்வாதிகள் என யாரையும் விட்டு வைக்காமல் கலாய்த்து வீடியோ பதிவிடும் நபர் தான் RJ விக்னேஷ். YouTube சேனல் மூலமாக அவருக்கு கிடைத்த விளம்பரம் மூலம் தற்போது ஒரு சில தமிழ் திரைப்படங்களில் துணை கதாபத்திரங்களில் நடித்து வருகிறார். மேலும் இவர் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார்.

இந்நிலையில் வழக்கமாக தனது சேனலில் அரசியல்வாதிகளை கிண்டல் செய்து பதிவிடுவது போல சமீபத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலினையும் வாங்க செயல் தலைவரே என்று ஆரம்பிக்கும் ஒரு வீடியோவின் மூலமாக என கிண்டல் செய்திருப்பார். கடந்த காலங்களில் திமுக தலைவர் ஸ்டாலின் பேசியது மற்றும் உளறியது என எதையும் விட்டு வைக்காமல் மிகவும் கடுமையாக அவரை அவரே விமர்சனம் செய்து கொள்வது போல அந்த வீடியோவை உருவாக்கியிருந்தார்.

திமுக தலைவர் ஸ்டாலினை கலாய்த்து RJ விக்னேஷ் உருவாக்கிய இந்த வீடியோவானது அதன் எதிர்க்கட்சி தொண்டர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வைரலாகி வருகிறது. இந்நிலையில் பிரபல நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியில் ஸ்டாலினை விமர்சிக்கும் மீம்ஸ் மற்றும் வீடியோக்களை திமுகவை சேர்ந்தவர்கள் பணம் கொடுத்து நீக்க ஒரு டீம் உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்தது. பிரபல அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் திமுகவுடன் இணைந்து செயல்படுவதாக கூறிய நிலையில் இந்த செய்தியும் வெளியானதால் இது அவருடைய ஆலோசனை என்றும் பலர் யூகங்களின் அடிப்படையில் பரப்பி வந்தனர்.

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் RJ விக்னேஷ் திமுக தலைவர் ஸ்டாலினை விமர்சனம் செய்து உருவாக்கிய அந்த வீடியோவினை இணைத்து இந்த வீடியோவையா திமுகவினர் கோடி கணக்கில் பணம் கொடுத்து நீக்கினார்கள்? என கேள்வி கேட்கும் விதத்தில் பகிர்ந்து வந்தனர்.

இந்த சூழலில் தான் தற்போது அந்த வீடியோவை உருவாக்கிய RJ விக்னேஷ் அரசியல்வாதிகள் சிலரால் மிரட்டபடுவது போலவும், இனிமேல் யாரையும் விமர்சித்து வீடியோ பதிவிட கூடாது என வாக்கு மூலம் வாங்குவது போலவும் வீடியோ காட்சி ஒன்று முகநூல் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான இந்த வீடியோவில் RJ விக்னேஷ் தாக்கபடுவது மற்றும் மிரட்டபடுவது திமுகவினர் செய்தது தான் என செய்திகள் வெளியானது. வாக்குமூலம் கொடுப்பது போல உள்ள அந்த வீடியோவில் அவரை மன்னிப்பு கேட்க சொல்லியும், இனி இது போல செய்ய கூடாது என்றும் சிலர் வற்புறுத்தி எழுதி வாங்குவது போல அமைந்துள்ளது. இந்த சர்ச்சையான சூழ்நிலையில் தான் இதற்கு காரணமான RJ விக்னேஷ் இதற்காக விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் தெரிவித்த விளக்கத்தில் “என்னை யாரும் தாக்கவில்லை என்றும், வழக்கம் போல தன்னுடன் வேலை செய்பவர்களை பிராங்க் செய்வதற்காக நாங்களே எடுத்த வீடியோ தான் அது என்றும், அதாவது ஸ்மைல் சேட்டையில் பணி புரிந்த போது உருவாக்கிய வீடியோ தான் அது என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால் எதோ சில காரணங்களால் அதை அப்போது வெளியிடவில்லை. ஆனால் வீடியோ எடுத்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிய நிலையில் தற்போது அந்த வீடியோவை எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து அதிகாரபூர்வமான விளக்கம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version