தனியார் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி!! போலீசார் தீவீர விசாரணை!!
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்கும் போது ரோந்து போலீசார் வந்ததால் மர்ம நபர் தப்பி ஓட்டம். பல லட்ச ரூபாய் பணம் தப்பியது.
பாலு செட்டி சத்திரம் போலீசார் விசாரணை.
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் அடுத்த சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அருகில் உள்ள பாலு செட்டி சத்திரம் பகுதி பஜார் வீதியில் தனியார் ஏடிஎம் மையம் செயல்பட்டு வருகிறது.
இந்த ஏடிஎம் மையத்தில் இரண்டு ஏடிஎம் இயந்திரங்கள் உள்ள நிலையில், இன்று அதிகாலை ஏடிஎம் மையத்திற்குள் புகுந்த மர்ம நபர் ஒரு ஏடிஎம் இயந்திரத்தை உடைத்துக் கொண்டு இருந்துள்ளார்.
இரவு நேரத்தில் ரோந்து சுற்றும் போலீசார் அதிகாலை நேரங்களில் ஏடிஎம் இயந்திரங்களை கண்காணித்துவிட்டு செல்வது வழக்கம்.
அதன்படி ரோந்து போலீசார் ஏடிஎம் மையத்தை கண்காணிக்க வந்த பொழுது சத்தம் கேட்ட மர்ம நபர் உடனடியாக அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
ஏடிஎம் மையத்திற்கு வந்த ரோந்து போலீசார் இயந்திரம் அடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு உடனடியாக பாலு செட்டி சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தில் சோதனை மேற்கொண்டு கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.
ஏடிஎம் இயந்திரத்தில் வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபாய் பணம் ஏதும் கொள்ளை போகாததால் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
இருப்பினும் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முற்பட்ட மர்ம நபர் குறித்து வழக்கு பதிவு செய்து அந்தப் பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை சேகரித்து அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதிக ஆட்கள் நடமாட்டம் உள்ள பஜார் வீதியில் செயல்பட்டு வரும் ஏடிஎம் மையத்தில் கொள்ளை முயற்சி நடைபெற்று உள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.