ரூ.2000 நோட்டுக்கள் இனிமேல் கிடையாது…மீண்டும் புழக்கத்திற்கு வருகிறது ரூ.1000 …உண்மை என்ன ?

0
157

நாட்டில் 2016ம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு, ரூ.1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்கப்பட்டன. கருப்பு பணத்தை ஒழிக்கும்பொருட்டு மோடி அரசு இந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது, மேலும் அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை வெளியிட்டது. தற்போது புது நோட்டுக்கள் புழக்கத்தில் இருந்து வருகின்றது. ஆனால் சமீப காலமாக ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் சற்று குறைந்து இருக்கிறது, ரூ.500, ரூ.200, ரூ.100, ரூ.20 மற்றும் ரூ.10 போன்ற நோட்டுக்களே அதிகம் புழக்கத்தில் இருந்து வருகிறது.

2018-19ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய ரூ.2000 நோட்டுகளை அச்சடிக்க புதிய உத்தரவு எதுவும் பிறப்பிக்கவில்லை என்று மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்து இருந்தது. இந்நிலையில் 2023-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு மீண்டும் ரூ.1000 நோட்டுக்களை புழக்கத்தில் கொண்டுவர முடிவெடுத்துள்ளது என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த தகவல் போலியானது என்று
PIB அதன் அதிகாரபூர்வ பக்கத்தில் ட்வீட் செய்துள்ளது மற்றும் இதுபோன்ற போலியான செய்திகளை யாருக்கும் பகிர வேண்டாம் எனவும் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது வைரலாகி வரும் அந்த செய்தியில், “ஜனவரி 1 முதல் புதிய ரூ.1000 நோட்டு வரப் போகிறது, ரூ.2000 நோட்டுகளை வங்கியில் திருப்பியளிக்க வேண்டும். நீங்கள் ரூ.50,000 மட்டுமே டெபாசிட் செய்ய அனுமதிக்கப்படுவீர்கள், அதுவும் இந்த அனும 10 நாட்களுக்கு மட்டுமே இருக்கும். அதன் பிறகு நீங்கள் வைத்திருக்கும் ரூ.2000 நோட்டுகளுக்கு மதிப்பு இருக்காது. அதனால் ரூ.2000 நோட்டுகளை வைத்திருக்க வேண்டாம்” என்று செய்தி பலருக்கும் அனுப்பப்பட்டு வருகிறது.