திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த விழாவில் வழங்கினர்.
திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவுத் துறையின் சார்பில், கூட்டுறவுத் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக் கூட்டம் மற்றும் சிறப்பு கடன் உதவிகள் வழங்கும் விழா நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, ஊரகத் தொழில் துறை அமைச்சர் பெஞ்சமின், தமிழ் வளர்ச்சி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன், கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சுப்ரமணியன், கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்) கிரேஸ் லால்ரின்டிக்கி பச்சாவ், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி, பொன்னேரி எம்.எல்.ஏ. பலராமன், திருத்தணி எம்.எல்.ஏ. நரசிம்மன், கும்மிடிப்பூண்டி எம்.எல்.ஏ. விஜயகுமார், அம்பத்தூர் எம்.எல்.ஏ. அலெக்சாண்டர், முன்னாள் அமைச்சர்களான பி.வி.ரமணா, மூர்த்தி, முன்னாள் எம்.பி. அரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், விவசாயிகள் 1,289 பேருக்கு ரூ.10.34 கோடி விவசாய கடன், சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 1,584 பேருக்கு ரூ.6.31 கோடி கடன் உதவி, 27 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் கடன் உதவி, 16 பேருக்கு ரூ.1.30 கோடி டிராக்டர் கடன் என மொத்தம் 4,694 பேருக்கு ரூ.57.49 கோடி கடன் உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் வழங்கினர்.
இதனைத்தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, திருவள்ளூர் மண்டலத்தில் 2011 முதல் 31.07.2020 வரை 1,75,008 விவசாயிகளுக்கு ரூ.988.47 கோடி பயிர் கடனும், நடப்பாண்டில் 31.07.2020 வரை 3,563 விவசாயிகளுக்கு ரூ.29.29 கோடி வட்டியில்லா விவசாய கடனும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் வரை திருவள்ளூர் மண்டலத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் 76,935 பேருக்கு ரூ.123.06 கோடி பயிர் காப்பீடு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மண்டலத்தில் கடந்த ஜூலை வரை 9,590 ருபே டெபிட் கார்டுகள் மற்றும் 17,992 ருபே விவசாய கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், திருவள்ளூர் மாவட்டத்தில் 118 அம்மா நகரும் நியாய விலைக் கடைகள் விரைவில் தொடங்கப்படும் என்றும் இதன் மூலம் மாவட்டத்தில் 23,125 குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.