ரஷிய படையினர் உடன்படிக்கையை மீறுகிறார்கள்: – உக்ரைன் சுகாதார அமைச்சர் குற்றச்சாட்டு!
உக்ரைன் நாட்டின் மீது இன்று 14-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது ரஷிய ராணுவம். உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தி வரும் ரஷ்ய ராணுவம் தனது தீவிர தாக்குதலால் உக்ரைன் நாட்டின் முக்கிய நகரங்கள் உள்பட இரண்டு அணுமின் நிலையங்களையும் கைபற்றியுள்ளது.
இந்த நிலையில், உக்ரைன் – ரஷியா இடையில் ஏற்கனவே இரண்டு முறை பேச்சுவார்த்தை நடத்தியும் அதில் உடன்பாடு எட்டப்படவில்லை. இதையடுத்து மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் நடைபெற்ற பேச்சுவார்த்தையிலும் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷிய ராணுவம் தொடுத்துள்ள போரின் காரணமாக, உக்ரைனில் இருந்து தினமும் லட்சக்கணக்கான உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் புகுந்து வருகின்றனர். தற்போது வரை சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உக்ரைனில் உள்ள பல முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷிய படைகள் உக்ரைனின் தலைநகரான கீவ்வை கைப்பற்றுவதில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், ரஷிய தாக்குதலால் இதுவரை 61 மருத்துவமனைகள் சேதமடைந்துள்ளதாக உக்ரைனின் சுகாதார அமைச்சர் லியாஷ்கோ கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:-
மருத்துவர்களுக்கு உதவும் மாநில அவசர சேவையின் பொது சேவைகள் மற்றும் சுகாதார ஊழியர்கள் காரணமாக, மருத்துவமனைகள் மூடப்படாமல், அவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். எவ்வாறாயினும், ரஷிய தாக்குதலுக்குப் பிறகு சேதமடைந்த ஜன்னல்கள் கொண்ட மருத்துவமனைகளாக அவை செயல்படுகின்றன என்று அவர் கூறினார்.
மேலும் ரஷிய படையினர் ஜெனீவா உடன்படிக்கையை மீறுகிறார்கள். அவர்கள் ஜெனீவா ஒப்பந்தத்தை மீறுவது மற்றும் மனிதாபிமான பாதைகளை அனுமதிக்காதது குறித்து உலக சுகாதார நிறுவனத்திற்கு உக்ரைன் தெரிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.