உக்ரைன் விவகாரத்தில், அமெரிக்கா, ரஷ்யா, உள்ளிட்ட நாடுகளுக்குக்கிடையே மிகவும் மோசமான சூழ்நிலையில், அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தங்களுடைய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அதனை தங்கள் நாட்டு வீரர்கள் விரட்டியடித்தனர் என தெரிவித்திருக்கிறது.
இது மிகப் பெரிய பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக ரஷ்யா ராணுவ அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சில விஷயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இது ஒருபுறமிருக்க உக்ரைனில் இருக்கக்கூடிய அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டுமென்று அமெரிக்கா கேட்டுக்கொண்டது இது உலக அளவில் எல்லோராலும் கவனிக்கப்படும் விஷயமாக மாறியது.
காரணம் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்காவின் ஆதரவு இருப்பதாக சொல்லப்படுகிறது. ஒருவேளை போர் மூளுமானால் உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. இதையே சூசகமாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்திருக்கிறார்.
இந்த நிலையில், பசுபிக் கடலில் இருக்கின்ற ஒரு தீவுக்கருகே ரஷ்யாவின் மார்ஷல் ஷபோஷ்னிக்கோவ் போர்க்கப்பல் பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது ரஷ்ய கடல் பகுதியில் அமெரிக்க கடற்படையின் வர்ஜினியா வகை நீர்மூழ்கி கப்பல் அத்துமீறி நுழைந்ததை ரஷ்ய கப்பல் கண்டுபிடித்ததாக சொல்லப்படுகிறது.
அதனையடுத்து கடலின் மேற்பரப்புக்கு வருமாறு கோரிக்கை விடுத்ததை அடுத்து அமெரிக்க கப்பல் அதனை நிராகரித்தது. இதனை நிராகரித்ததை அடுத்து ரஷ்ய போர்க் கப்பலில் இருந்த வீரர்கள் அமெரிக்க கப்பலை விரட்டியடிப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டார்கள்.
அதன்பிறகு அமெரிக்கக் கப்பல் முழுமையான வேகத்தில் அங்கிருந்து வெளியேறியதாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவிலிருக்கும் அமெரிக்க இராணுவ அதிகாரிக்கு சம்மன் அனுப்பப்பட்டதாக தெரிகிறது.
இதற்கிடையே ரஷ்ய கடல் பகுதியில் அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் அத்துமீறி நுழைந்ததாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டை அமெரிக்கா முற்றிலுமாக மறுத்திருக்கிறது.