பெண்ணைத் தாக்கிய எஸ்.ஐ! பரபரப்பு சம்பவத்தின் பின்னணி என்ன?
தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. சிறு குழந்தைகள் முதல் கல்லூரி மாணவிகள் மட்டுமல்லாது திருமணமான பெண்களும் பல்வேறு வகை கொடுமைகளால் பாதிக்கப் படுகின்றனர். அரசும் பல்வேறு விதமான சட்டங்கள் இயற்றியும், நடைமுறைப்படுத்தினாலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறைந்த பாடில்லை.
கடந்த டிசம்பர்-21 அன்று இளைஞர் ஒருவர் தனது காதலியை கொடூரமாக தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி கடும் கண்டனத்திற்கு ஆளான நிலையில் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் மற்றுமோர் பெண்ணுக்கு எதிரான கொடுமை டிவிட்டர் பக்கத்தில் வீடியோவாக வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பெண்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் காவல்துறை உதவியை நாடலாம். ஆனால் அந்த காவல் துறை அதிகாரியே பெண்களுக்கு எதிரான குற்றத்தில் ஈடுபட்டால் யாரிடம் செல்வது?. சமாஜ்வாடி கட்சியின் டிவிட்டர் பக்கத்தில் வெளியான ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.
அதில் கொடூர வீடியோவில் காவலர், பெண் ஒருவரை கொடூரமாக தாக்குவது போல இருக்கிறது. உத்திரபிரதேசத்தில் உள்ள கான்பூரின் காவல் நிலையம் ஒன்றில் எஸ்.ஐ ஒருவர் பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக தனி அறைக்கு இழுத்து செல்வதற்கு முயற்சி செய்வது தெரிகின்றது.
அதற்கு அந்த பெண் மறுத்து முரண்டு பிடித்ததால் அவரை எஸ்.ஐ கொடூரமான முறையில் அடித்து தாக்கியுள்ளார். இதுப்பற்றிய வீடியோ வெளியான நிலையில் அந்த போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்து வருகின்றன.