Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!!

#image_title

சிக்கன் குனியாவுக்கு பாதுகாப்பான மருந்து கண்டுபிடிப்பு! ஒரே முறை செலுத்தினால் சரியாகும் என தகவல்!

 

சிக்கன் குனியா நோய்க்கு ஒரே முறை செலுத்தினால் குணமாகும் வகையில் பாதுகாப்பான மருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

சிக்கன் குனியா நோய் கொசுக்கள் மூலம் பரவுகின்றது. தற்போது ஆசியா, ஆப்பிரிக்கா, அமெரிக்காவின் பல பகுதிகளில் சிக்கன் குனியா நோய் பாதிப்பு இருக்கின்றது. இந்த சிக்கன் குனியா தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வருகின்றது.

 

சிக்கன் குனியா நோய் பாதித்தால் 4 முதல் 8 நாட்களுக்கு காய்ச்சல் இருக்கும். தலைவலி, தசை வலி, மூட்டு வலி, காய்ச்சல், வாந்தி போன்ற பிரச்சனைகள் இருக்கும். சிக்கன் குனியா நோய் பாதித்த சிலருக்கு மூட்டு வலியானது மாதக்கணக்கில் அல்லது வருடக் கணக்கில் கூட தொடரும். சிக்கன் குனியா நோயால் உயிரிழப்பு ஏற்படுவது கிடையாது என்றாலும் வயதானவர்கள் அதிகளவு இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

 

சிக்கன் குனியா நோய்க்கு இதுவரை அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசி எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் இந்த சிக்கன் குனியா நோய்க்கு தற்போது தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசிக்கு விஎல்ஏ-1553 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த விஎல்ஏ-1553 தடுப்பூசியை ஒரே ஒரு தவணை செலுத்தினால் போதும். இந்த விஎல்ஏ-1553 தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது என்று லான்சொட் ஜர்னல் மருத்துவ ஆய்வு இதழில் அறிவிக்கப்பட்டுள்ளது. விஎல்ஏ-1553 தடுப்பூசியை பிரான்சை சேர்ந்த வால்நேவா நிறுவனம் தயாரித்துள்ளது.

 

இந்த விஎல்ஏ-1553 தடுப்பூசி பற்றி நிறுவனத்தின்  மேலாளர் மார்டினா ஷினைடர் அவர்கள் “இந்த விஎல்ஏ-1553 தடுப்பூசியை செலுத்தினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். திடீரென்று சிக்கன் குனியா நோய் அதிகளவு பரவினால் அதை கட்டுப்படுத்த இந்த விஎல்ஏ-1553 தடுப்பூசி உதவும். வயதானவர்களுக்கு இந்த தடுப்பூசி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது” என்று கூறினார்.

 

அமெரிக்காவில் 43 இடங்களில் 4115 இளைஞர்களுக்கு இந்த விஎல்ஏ-1553 தடுப்பூசியை செலுத்தி சோதனை செய்யப்பட்டது. இதற்கு பிறகு ஒரு வாரம், 28 நாட்கள், 3 மாதம், 6 மாதம் இடைவெளியில் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதிக்கப்பட்டது.

 

இந்த பரிசோதனையின் முடிவில் ஒரு முறை எடுத்துக் கொண்ட தடுப்பூசியின்  மூலமாக 99 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது தெரியவந்துள்ளது. இதற்கு மத்தியில் பிரேசிலில் குறைவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள், சிறுவர்கள், கர்ப்பிணிப் பெண்களுக்கு இந்த தடுப்பூசி சோதனை நடைபெற்று வருகிறது.

 

Exit mobile version