நாளை சகல தோஷங்களையும் நீக்கும் சனிப் பிரதோஷம்! சிவனை வழிபடுவது எப்படி?

0
196

நாளை சகல தோஷங்களையும் நீக்கும் சனிப் பிரதோஷம்! சிவனை வழிபடுவது எப்படி?

சிவபெருமானை நாம் நாள்தோறும் வணங்குகிறோம். ஆனாலும் அவருக்கு உகந்த தினமான பிரதோஷ காலத்தில் எம்பெருமான் சிவனை அவருடைய ஆலயத்திற்குச் சென்று வணங்குவதே சிறந்த பலனை அளிக்கும் முன்னோர்கள் கூறியுள்ளனர்.

சிவ வழிபாட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது தான் இந்த பிரதோஷ வழிபாடு. ஒவ்வொரு அமாவாசைக்கு முன்னதான மூன்றாம் நாளும் பெளர்ணமிக்கு முன்னதான மூன்றாம் நாளும் பிரதோஷம் வரும் ஆக ஒவ்வொரு மாதத்திற்கும் இரண்டு பிரதோஷங்கள் உண்டு.

ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரை உள்ள காலம் தான் பிரதோஷ காலம் எனப்படுகிறது. இந்த வேளையில், சிவாலயங்களில், சிவ பெருமானுக்கு சிறப்பு வழிபாடுகளும் அபிஷேகங்களும் ஆராதனைகளும் வெகு விமரிசையாக நடைபெறும். அப்போது சிவனாருக்கும் நந்திதேவருக்கும் பல்வேறு விசேஷ பூஜைகளும் அலங்காரங்களும் நடைபெறும்.

இந்தத் திரயோதசி திதி சனிக் கிழமைகளில் வந்தால் மஹா சனிப்பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அதன்படி வரும் சனிக்கிழமை 09.11.2019 அன்று மஹா சனிப் பிரதோஷம் வருகிறது.

இதே போல் ஒவ்வொரு கிழமையன்றும் வரும் பிரதோஷமும் மகத்துவம் வாய்ந்தவை. அந்த வகையில் சனிக்கிழமை தினங்களில் வருகிற பிரதோஷம் மிகவும் உன்னதமானது. ஒரேயொரு சனிக்கிழமையன்று வருகிற பிரதோஷத்தின் போது, சிவனாரைத் தரிசனம் செய்தாலே, நம் இந்த ஜென்மத்தில் செய்த பாவங்களெல்லாம் தொலைந்துவிடும் என்பது முன்னோர்கள் கூறிய ஐதீகம். ஐந்து சனிப் பிரதோஷ தரிசனம் முந்தைய பிறவியில் செய்த பாவங்களையும் போக்கவல்லது என்கிறார்கள் சிவ ஆச்சார்யர்கள்.

பிரதோஷ விரதம் :

பிரதோஷ நாட்களில் அதிகாலை எழுந்து நீராடி, சிவாலயம் சென்று வழிபட வேண்டும். அன்று முழுவதும் உணவின்றி உபவாசம் இருந்து திருமுறைகளைப் படிக்க வேண்டும். பிரதோஷ காலமான மாலை 4.30 மணிக்கு சிவாலயம் சென்று உள்ளம் உருகி சிவ பெருமானுக்கு உகந்த மந்திரமான ஐந்தெழுத்தை சிவாய நம என ஓதி வழிபட வேண்டும்.

எல்லா பிரதோஷங்களையும் விட சனிக்கிழமை வரும் பிரதோஷம் ‘சனிப் பிரதோஷம்” அதிக அளவில் பலன் தரக் கூடியது என்று சிறப்பாகக் கூறப்படுகிறது. அதுவே கிருஷ்ணபட்சத்தில் (தேய்பிறை) சனிக்கிழமையில் வந்தால் ‘மஹாப் பிரதோஷம்” என்றும் வழங்கப்படுகிறது.

சாதாரண பிரதோஷ வேளைகளில் சிவாலயம் சென்று வழிபட்டால் ஒரு வருடம் முழுவதும் ஆலயம் சென்று இறை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷத்தன்று அவ்வாறு வழிபடும்போது ஐந்து வருடம் ஆலய வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்பது முன்னோர்கள் நம்பிக்கை.

பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்க்கலாம். முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடியே கேட்க வேண்டும்.

சிவ மந்திரமான நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதியபடி பிரதோஷ காலத்தில் ஈசனைப் பிறையணிந்த பெருமானாக தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க வழிபாட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்.

பிரதோஷ நாட்களில் சிவாலயங்களில் குறித்த நேரத்தில் சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. சிவனுக்கு உகந்த பால், தேன், தயிர், சந்தனம், பன்னீர், திருநீறு மற்றும் பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் செய்து வில்வம், அரளி, தாமரை, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்த பின் தீபாராதனை நடைபெறும்.

இறைவனுடன் கூடவே அவருடைய வாகனமான நந்தி தேவருக்கும் இந்நாளில் அபிஷேகம் நடைபெறும். இவருக்கும் எண்ணெய், பால், தயிர், சந்தனம், இளநீர் போன்றவற்றை அபிஷேகத்திற்காகத் தரலாம்.

பின் அருகம் புல், பூ சாற்றிய பின் வில்வத்தால் அர்ச்சனை செய்வது வழக்கம். நந்தி தேவரது தீபாராதனைக்குப் பின் மூலவரான லிங்கத்திற்கு நடக்கும் தீபாராதனையை நந்தியின் இரண்டு கொம்புகளுக்கிடையே பார்த்து தரிசிக்க நம் தோஷங்கள் அனைத்தும் நீங்கி நன்மை உண்டாகும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.