பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்து துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம்!
ஓசூர் அருகே பேரூராட்சி வார்டு உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர்.
ஓசூர் அருகே கெலமங்கலம் பேரூராட்சி வார்டு உறுப்பினரை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் 30-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் பேரூராட்சி வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஓசூர் அருகேயுள்ள கெலமங்கலம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளது. இதில் 13 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் வெங்கடாஜலபதி, கடந்த சனிக்கிழமை வெங்கடாசலபதியின் வார்டு பகுதியில் வாட்டர் பைப் லைன் அமைக்கும் பணிகள் நடைபெற்றுள்ளது. அப்போது அங்கு சென்ற வெங்கடாஜலபதி வாட்டர் பைப் அமைக்கும் பணிகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.
ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த அவர் பெரிய பாறை கல்லை எடுத்து வாட்டர் பைப் லைனை உடைக்க முற்பட்டுள்ளார். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த வாட்டர் மேன் குப்புசாமியின் காலில் கல் விழுந்துள்ளது.
இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அவர் தேன் கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவத்திற்கு கெலமங்கலம் பேரூராட்சியில் வேலை பார்த்து வரும் துப்புரவு பணியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வாட்டர் மேன் குப்புசாமியை தாக்கிய வார்டு உறுப்பினர் வெங்கடாசலபதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி அவரை கண்டித்து கெலமங்கலம் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் 30க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேரூராட்சி தலைவர் தேவராஜ் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், பேரூராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும் சமாதானம் ஆகாமல் தொடர்ந்து அப்பகுதியில் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.