வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் சிறை தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த சசிகலா, கடந்த மாதம் 27 ஆம் தேதி சிறை தண்டனையிலிருந்து விடுதலை அடைந்தார். இந்த நிலையில், அவர் பெங்களூரு நகரிலேயே ஓய்வு எடுத்து வந்தார். நாளை மறுதினம் சசிகலா சென்னை திரும்ப இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த நிலையில் ,சசிகலா விடுதலை ஆன அன்றிலிருந்து பல மாவட்டங்களிலும் ஆளும் கட்சியான அதிமுகவை சார்ந்தவர்களும் சசிகலாவை வரவேற்று சுவரொட்டிகள் அடித்து ஒட்டி வருகிறார்கள். அவ்வாறு சுவரொட்டிகளை அடித்து வரும் நிர்வாகிகள் அனைவரும் அந்த கட்சியை விட்டு உடனடியாக நீக்கப்படுகிறார். அதோடு சசிகலா தன்னுடைய காரில் அந்த கட்சியின் கொடியை உபயோகப்படுத்தியது குறித்து அதிமுகவைச் சேர்ந்த அமைச்சர்கள் டிஜிபி அலுவலகத்தில் புகார் கொடுத்தார்கள். சசிகலா சென்னை திரும்பிய பின்னர் அதிமுகவின் மீட்டெடுக்கும் நடவடிக்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வார் என்று டிடிவி தினகரன் தெரிவித்து வருகிறார்.
இந்த நிலையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் அவர்கள், இணை ஒருங்கிணைப்பாளர் தமிழக முதலமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், மற்றும் மாவட்ட செயலாளர்கள் , உள்ளிட்டோருக்கு ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து இருக்கிறார்கள். அந்த கூட்டமானது இன்று மாலை 5 மணி அளவில் சென்னை ராயப்பேட்டை பகுதியில் இருக்கும் அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தின்போது சசிகலாவின் வருகை தொடர்பாக விவாதிக்கப்பட இருப்பதாக தெரியவருகிறது.
அதோடு பாட்டாளி மக்கள் கட்சியை கூட்டணியில் தக்க வைப்பதற்காக அந்த கட்சியின் இட ஒதுக்கீடு கோரிக்கையை வலியுறுத்தி அதிமுகவிற்கு சற்று நெருக்கடி கொடுத்து வருகின்றது. அதோடு 40 தொகுதிகள் வரையில் பாட்டாளி மக்கள் கட்சி கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாகவும் மற்ற கட்சிகளுக்கு கூட்டணியில் இருக்கக்கூடிய தொகுதிகள் தொடர்பான இன்றைய தின ஆலோசனை கூட்டத்தில் ஆலோசனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.