Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாத்தான்குளம் தந்தை மகன் கொலையை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிக்கு நேர்ந்த சோகம்

Sathankulam Case CBI Officer infected by Coronavirus

Sathankulam Case CBI Officer infected by Coronavirus

சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் என்பவரும் அவரது மகன் பென்னிக்ஸ் என்பவரும் விசாரணைக்காக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் லாக்கப்பில் மரணமடைந்தனர்.இதற்கு காவல்துறையினர் விசாரணையின் பேரில் நடத்திய கொடூர தாக்குதல் தான் காரணம் என கூறப்பட்டது. தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரணை செய்த சி.பி.சி.ஐ.டி. போலீசார் இதை கொலை வழக்காக மாற்றி, இதில் தொடர்புடைய 10 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதனையடுத்து சர்ச்சைக்குரிய இந்த வழக்கானது சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட சி.பி.ஐ. அதிகாரிகளை கொண்ட  குழுவானது, சாத்தான்குளம் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து காவல் துறை அதிகாரிகளிடமும் விசாரணை நடத்தினர். இது மட்டுமில்லாமல் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸின் உறவினர்கள், நண்பர்கள் என அனைவரிடமும் அவர்கள் இது குறித்து விசாரணை செய்தனர்.

இந்த சி.பி.ஐ. விசாரணையின் போது இந்த சம்பவத்தில் தொடர்புடைய இடங்களான சாத்தான்குளம் காவல் நிலையம், கோவில்பட்டி சிறைச்சாலை, அரசு மருத்துவமனை என அனைத்து இடங்களுக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணைக்காக சென்று வந்தனர். மேலும் தற்போது இந்த வழக்கில் தொடர்புடைய 3 காவலர்களை சி.பி.ஐ. அதிகாரிகள் தங்களுடைய காவலில் எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். இதனையடுத்து விசாரணை செய்து வரும் அந்த 3 காவலர்களையும் நாளை மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளனர்.

இந்நிலையில் திடீர் திருப்பமாக, தற்போது சாத்தான்குளம் சம்பவம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டு வரும் சி.பி.ஐ. அதிகாரி ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏற்கனவே திட்டமிட்டுள்ளதற்கு மாறாக ஒரு நாளைக்கு முன்பே இந்த விசாரணை முடித்துக் கொள்ளப்பட்டு, இன்று மாலை 4 மணிக்கு  காவலர்கள் மூவரையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

காவல் நிலையத்தில் தந்தை மகன் மரணமடைந்ததை விசாரிக்க டெல்லியில் இருந்து வந்த 8 சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இந்த வழக்கு குறித்து விசாரித்து வந்த நிலையில் தற்போது அவர்களில் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்த வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கபடுகிறது.

Exit mobile version