தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு விதிமுறையை மீறி கடை திறந்து வைத்த காரணத்தால் தந்தை, மகனை விசாரணைக்கு அழைத்துச் சென்று லாக் அப்பில் வைத்து கொலை செய்த சம்பவம் இந்திய அளவில் உலுக்கியது. இச்சம்பவம் தொடர்பாக பொதுமக்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்களும் சரியான நீதி கிடைக்க வேண்டுமென்று பல்வேறு தரப்பில் குரல் எழுந்தது.
இக்கொலை வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தவிட்டது. தந்தை, மகன் கொலை வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடந்த அன்று காவல் நிலையத்தில் பணிபுரிந்த மற்ற காவலர்களிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை செய்தனர்.
அங்கு பணிபுரிந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் சாமத்துரை, வேல்துரை, தாமஸ் மற்றும் வெயிலுமுத்து ஆகியோரிடம் விசாரணைக்கு பின்னர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் கொலை சம்பந்தமான முழு தகவலும் அறியும் நோக்கில் இவர்களை கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.