இந்தியாவுடனான முக்கிய சேவையை ரத்து செய்தது சவுதி அரேபியா

0
134
Saudi Arabia

இந்தியாவில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவுக்கான விமான சேவையை தற்காலிகமாக ரத்து செய்து சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதுவரையில் 56 லட்சத்து 46 ஆயிரம் பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேவேளையில், குணமடைபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வந்தாலும், தினமும் சராசரியாக சுமார் ஒரு லட்சம் பேருக்கு பாதிப்பு என்ற நிலையை இந்தியா தற்போது சந்தித்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா பாதிப்பால் இந்தியா மற்றும் சவூதி அரேபியா இடையிலான  அனைத்து விமானங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த நாட்டின் விமானப் போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக இந்தியா, பிரேசில் மற்றும் அர்ஜெண்டினா உள்ளிட்ட நாடுகளுக்கான விமான பயணங்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து பயணம் செய்யும் பயணிகள், பயணம் செய்வதற்கு 96 மணி நேரத்திற்கு முன்னதாக, ஆர்டி-பிசிஆர் சோதனையின் அறிக்கையின் நகலை கொண்டு சமர்பிக்க வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த 20 ஆம் தேதி முதல் அக்டோபர் 3 ஆம் தேதி வரையில் ஏர் இந்தியா விமானங்களுக்கு ஹாங்காங் அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.