சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை

0
116

சவுக்கு சங்கரைப் பார்க்க பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை… கடலூர் சிறை நிர்வாகம்

லஞ்ச ஒழிப்புத்துறையில் கிளார்க்காக பணியாற்றி வந்த சங்கர் அரசு ஆவணங்களை கசியவிட்டதாகக் கூறி கடந்த 2009 ஆம் ஆண்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். பின்னர் அந்த வழக்கில் இருந்து அவர் விடுதலை ஆனாலும், மீண்டும் அவரை பணியில் சேர்த்துக்கொள்ள வில்லை. சஸ்பெண்ட்டிலேயே அவர் இத்தனை ஆண்டுகாலமும் இருந்து வந்தார். இதற்காக குறைந்தபட்ச சம்பளமும் அவர் பெற்று வந்தார்.

அதன் பின்னர் அவர் சவுக்கு என்ற ஆன்லைன் ஊடகத்தைத் தொடங்கி அரசியல் விமர்சகராகவும் செயல்பட்டு வந்தார். அரசு அலுவலகங்களில் நடக்கும் பல ஊழல்கள் ஆகியவற்றை வெளியிட்டு வந்தார். சமீபத்தில் அவர் ஆர்டர்லி முறை வழக்கத்தில் இருப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்து அதை பேசுபொருளாக்கினார். நீதிமன்றங்களிலும் நீதித்துறையிலும் ஊழல் மலிந்துவிட்தாகவும் குற்றம் சாட்டினார்.

இதையடுத்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு 6 மாத காலம் சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இப்போது அவர் கடலூர் சிறையில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் இப்போது அவரைப் பார்க்க வரும் பார்வையாளர்களை அனுமதிப்பதில்லை என ஊடகவியலாளர் பெலிக்ஸ் ஜெரால்டு பதிவிட்டுள்ளார். சவுக்கு சங்கரைப் பார்க்க கடலூர் மத்திய சிறைக்கு சென்றதாகவும், காலையில் இருந்து காத்திருந்து அவரைப் பார்க்க முடியாமல் திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக சங்கர் வகித்து வந்த அரசு பணியில் இருந்து நிரந்தரமாக நீக்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது அறிவித்துள்ளது. இது சம்மந்தமான ஷோகாஸ் நோட்டீஸை சிறையில் வைத்து அவரிடம் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்துவிட்டாராம். இதனால் அந்த நோட்டீஸ் சிறை முகப்பில் ஒட்டப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.