சென்னை கீழ்ப்பாக்கம், தாமோதரமூர்த்தி தெருவில் வாடகைக்கு வசித்து வந்த யு-டியூபர் சவுக்கு சங்கரின் வீடு, மர்ம நபர்களால் சூறையாடப்பட்டது. வீட்டு உள்ளே இருந்த பொருட்களை சேதப்படுத்தி, குறிப்பாக டைனிங் டேபிள் மற்றும் படுக்கை அறைகளில் மலத்தைக் கரைத்து தெளித்து அசிங்கப்படுத்தியுள்ளனர். அப்போது வீட்டில் சங்கரின் 68 வயதான தாய் கமலா மட்டுமே இருந்தார். சம்பவம் தொடர்பாக அவர் கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விவகாரத்தில், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, சவுக்கு சங்கரின் கருத்துக்களை கடுமையாக எதிர்த்தார். அவர் கூறுகையில், முதல்வர் ஸ்டாலின் உருவாக்கிய அம்பேத்கர் தொழில் முனைவோர் திட்டம், இந்தியாவில் இல்லாத ஒரு அற்புதமான திட்டம். இதில் தவறு இருந்தால், உரிய அதிகாரியிடம் முறையிடலாம் அல்லது நீதிமன்றம் சென்று வழக்கு தொடுத்துக் கொண்டு உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வரலாம். ஆனால், பயனாளிகளை அவமதிக்கும் விதமாக பேச முடியாது.
யு-டியூபர் சவுக்கு சங்கர், அந்த பயனாளிகளை ‘குடித்து விட்டு படுத்துக் கொள்கின்றனர்’, ‘இவர்கள் தகுதியற்றவர்கள்’, ‘மலம் அள்ளுபவர்கள்’ என அவமதித்து பேசியுள்ளார். இதற்கு சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர் தப்பிக்க முடியாது. மேலும், அவரது வீட்டில் மலத்தைக் கரைத்த தெளித்தது தொடர்பாக, இதில் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு தொடர்பு இருந்ததா என கேட்டுக் கொள்ளலாம்.
சங்கரின் வீட்டில் நடந்த செயலுக்கு காங்கிரஸ் எந்த விதத்திலும் ஆதரவு தரவில்லை. இது திட்டமிட்ட நடவடிக்கையாக இருக்கலாம். என்னை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்காகவே, இந்தத் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். இதற்காகவே சவுக்கு சங்கர், திட்டமிட்டு இந்த பரப்புரையை மேற்கொள்கிறார். ஆனால், காங்கிரஸ் கட்சி இப்படியான செயல்களை ஒருபோதும் அனுமதிக்காது செல்வப்பெருந்தகை பேசியுள்ளார்.