மத்திய அரசின் துலிப் திட்டத்தின் மூலம் திருச்சி மாநகராட்சியில் ஊக்கத் தொகையுடன் கூடிய பயிற்சி வகுப்பில் சேர இளம் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஜூன் 4-ம் தேதி டெல்லியில் நகர்ப்புற துறையும், மத்திய கல்வி துறையும் இணைந்து ‘துலிப்'(TULIP- The Urban Learning Internship Program) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது.
இதில் நிகழாண்டு இளநிலைப் படிப்பை முடித்தவர்களுக்கு நாட்டில் உள்ள 4,400 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பிலும், சீர்மிகு நகரத் திட்டப் பணியிலும் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங்க் மற்றும் மத்திய வீட்டுவசதி – நகர்ப்புற துறை இணை அமைச்சர், ஹர்தீப்சிங் இருவரும் இத்திட்டத்தை தொடங்கி வைத்தனர்.
இந்நிலையில் இன்று ஆகஸ்டு 25-ஆம் தேதி திருச்சி மாநகராட்சியின் உள்ளாட்சி அமைப்புகள் சார்ந்த இளைஞர்களுக்கு அறிவிப்பு விடுத்துள்ளது.
இதுதொடர்பாக, திருச்சி மாநகராட்சி நிர்வாகம் கூறியதாவது, “திருச்சி மாவட்டத்தில் வசிக்கும் பி.ஆர்க்., பி.பி.ஏ., பி.எஸ்சி தோட்டக்கலை, பி.சி.ஏ., டி.இ.இ. (சுற்றுச்சூழல் பொறியியலில் பட்டயம்), பி.இ., பி.டெக். (சிவில், இஇஇ, கணினி அறிவியல்) ஆகிய படிப்புகளை முடித்து, 18 மாதத்திற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்குமாறும், மேலும் www.internship.aicte-india.org என்ற இணையதள முகவரியில் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் எனவும், அதன்பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மாநகராட்சி ஆணையர் சு.சிவசுப்பிரமணியன் கூறியதாவது, “ஒவ்வொரு பாடப் பிரிவிலும் 5 பேர் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் சீர்மிகு நகரத் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளில் 6 மாத காலம் பயிற்சியும், மாதத்துக்கு தலா ரூ.5,000 வீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்படும்” எனக் கூறியுள்ளார்.