கொரோனா காலத்தில் பள்ளிக்கு சென்றதால் மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!

0
137

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆரம்பப் பள்ளியில் மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. புதிய கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பல பள்ளிகள் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றன. ஆனால், பொருளாதார ரீதியாக பின் தங்கியுள்ள பல மாணவர்களுக்கு இந்த கொரோனா காலத்தில் முறையான கல்வி கிடைப்பதில்லை.

இந்நிலையில், கர்நாடகா மாநிலம், பெலகெவி மாவட்டம், திம்மாபூர் கிராமத்தில் உள்ள ஏழை மாணவர்களுக்கு கொரோனா காலத்திலும் முறையான கல்வி சென்றடைய வேண்டும் என்ற எண்ணத்தில் வித்தியகாமா என்ற திட்டம் மாநில அரசு சார்பாக தொடங்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் பெலகெவி மாவட்டத்தில் 195 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இவர்களை பல குழுக்களாக பிரித்து, ஒவ்வொரு குழுவிலும் 10 முதல் 15 மாணவர்கள் சமூக இடைவெளியுடன் பாடம் கற்று வருகின்றனர். இதில் பயின்ற மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், அந்தப் பள்ளியின் ஆசிரியர்கள் 6 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடையே கொரோனா தொற்று பரவியுள்ளதால் வித்யகாமா திட்டத்தை மறு உத்தரவு வரும் வரை மாநில கல்வித்துறை நிறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மாணவர்கள் 34 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது பெற்றோர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.