தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் திறக்கப்படாது..!!

0
137

கொரோனா தடுப்பூசி கிடைக்கும் வரை டெல்லியில் பள்ளிகள் திறக்கப்படாது என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பள்ளி, கல்லூரிகள், கல்வி நிறுவனங்கள் என அனைத்தும் மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கியதை தொடர்ந்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையானது கிட்டத்தட்ட 8 மாதங்களாக நீடித்துக் கொண்டே வருகிறது.

இதற்கிடையே அக்.15ம் தேதி முதல் பள்ளி மற்றும் கல்லூரிகளைத் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்தது. மேலும், இதுகுறித்து இறுதி முடிவுகளை அந்தந்த மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம் என்றும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் பின்பற்றவேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறக்கப்பட்டு ஓரிரு நாட்களிலேயே மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தது. இதனால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன.

தற்போது உள்ள சூழலில் கொரோனா தொற்றின் தாக்கம் சற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆனாலும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறப்பது குறித்து மாநில அரசுகள் எந்த ஒரு இறுதி முடிவும் இதுவரை எடுக்கவில்லை. இந்நிலையில் டெல்லியில் பள்ளிகளைத் திறப்பது குறித்து எந்த திட்டமும் இல்லை என்றும் தடுப்பூசி கிடைக்கும் வரை பள்ளிகள் மூடப்பட்டிருக்கும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் வரும் ஏப்ரல் மாதத்தில் தான் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஏப்ரல் மாதத்தில் நடக்கும் இறுதித்தேர்வு இந்த முறை ஆன்லைனில் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.