சென்னை உட்பட மேலும் மூன்று மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகள் நாளையும் விடுமுறை!
தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று இன்று காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி தென்மேற்கு வங்க கடல் மற்றும் வட தமிழக கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டுள்ளது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை சென்னைக்கு அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சேலம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இந்த 16 மாவட்டங்களிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் நேற்று முதலே கனமழை பெய்து வருவதும் குறிப்பிடத்தக்கது. கனமழை காரணமாக சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கனமழை காரணமாக நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல வேலூர் மற்றும் திருப்பத்தூர் மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.