10-ஆம் வகுப்பு வரை மட்டும் திறக்கப்படும் பள்ளிகள்! கல்வித்துறை அதிகாரிகளுக்கு முதல்வர் விதித்த உத்தரவு!!
கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் மாணவர்கள் அனைவரும் சீருடை அணிந்து வர கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், அந்த கல்லூரியில் பயின்று வந்த இஸ்லாமிய மாணவிகள் சிலர் சீருடை மீது ஹிஜாப் அணிந்து வந்துள்ளனர்.
இதனால், மாணவிகள் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வர தடை விதித்து கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டது. இதற்கு அந்த மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். கல்லூரி நிர்வாகத்தின் இந்த முடிவை எதிர்த்து, இஸ்லாமிய மாணவிகள் பர்தா அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளின் இந்த போராட்டத்தை எதிர்த்து, அந்த கல்லூரியில் படிக்கும் இந்து மதத்தை சேர்ந்த மாணவர்கள் காவித் துண்டு அணிந்து கல்லூரிக்கு வந்தனர். இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதையடுத்து கர்நாடகத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அளித்து கர்நாடக அரசு உத்தரவிட்டது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்றம், பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் எந்தவித மத அடையாளங்களையும் வெளிப்படுத்தும் ஆடைகளை அணிந்து வரக் கூடாது என இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, கர்நாடகத்தில் 14-ந் தேதி உயர்நிலை பள்ளிகள் திறக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்திருந்தது. அதன்படி கர்நாடகத்தில் இன்று (திங்கட்கிழமை) உயர்நிலைப்பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அந்த வகையில், 10-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் வகுப்புகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் அனைவரும் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவை பின்பற்ற வேண்டும் என்று அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த நிலையில் உயர்நிலைப் பள்ளிகள் திறப்பு குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
கர்நாடகத்தில் நாளை (திங்கட்கிழமை) உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இதையொட்டி நான் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோருடன் ஆலோசனை மேற்கொண்டேன். இதில் பள்ளிகளில் நல்லிணக்கம் மற்றும் அமைதி நிலவ தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதாக அவர் கூறினார்.