வெங்காய திருடர்களுக்கு எச்சரிக்கை: அரிவாள், கம்புடன் பாதுகாப்பு ஏற்பாடு!
வெங்காயத்தின் விலை தினமும் விஷம் போல் ஏறி வருவதால் வெங்காயத்தை பயிர் செய்வதை விட வெங்காயத்தை பாதுகாப்பது விவசாயிகளுக்கு பெரும் பிரச்சனையாக உள்ளது.
வெங்காய அறுவடை செய்வதற்கு முன்னரே மர்மநபர்கள் வெங்காயத்தை அறுவடை செய்து கொண்டு செல்வதும், வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் இடங்களில் வெங்காய மூட்டைகளை திருடிச் செல்வதுமான சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
இதனை அடுத்து வெங்காயம் பயிரிடுவது மற்றும் கொள்முதல் செய்வது மட்டுமன்றி அதனை பாதுகாக்க வேண்டிய நிலையும் தற்போது ஏற்பட்டுள்ளது.
தங்கம் வைரம் மற்றும் ரொக்கம் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பாதுகாப்பு அதிகாரிகள் பணியமர்த்தப்படுவது போல் தற்போது வெங்காயம் பயரிடப்பட்டிருக்கும் நிலத்திற்கும் வெங்காயம் சேமித்து வைத்திருக்கும் குடோன்களுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள் தற்போது நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
அவர்கள் தங்கள் கைகளில் கம்பு, அரிவாள் உருட்டுக்கட்டை உள்ளிட்ட பொருள்களுடன் பாதுகாப்பாளர்களாக, திருடர்களிடமிருந்து வெங்காயத்தை பாதுகாக்க பணியமர்த்தப்பட்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்காயம் குறித்து பல்வேறு மீம்ஸ்கள் மற்றும் வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கும் போது இந்த செய்தி உண்மையிலேயே பொதுமக்களுக்கு ஒரு ஆச்சரியம் கலந்த அதிர்ச்சியான செய்தியாக தான் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கதக் என்ற மாவட்டத்தில் வெங்காயம் விளைச்சலில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் தங்களது பயிரை பாதுகாக்க கையில் உருட்டுக்கட்டை, அரிவாள் உள்ளிட்ட பொருட்களுடன் பாதுகாப்பு பணியாளர்களை அமர்த்தியுள்ள புகைப்படம் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.