Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்….. இயக்குனர் வெற்றிமாறன்!

#image_title

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம்….. இயக்குனர் வெற்றிமாறன்!

‘எள்ளு வய பூக்கலையே’ பாடல் உருவானதற்கு சீமான் தான் காரணம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறியுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் அசுரன். இந்த படத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். வெற்றிமாறன் இயக்கிய பெரும்பாலான படங்கள் தனுஷ் நடிப்பில் வெளியானவை. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன், ஆடுகளம், வடசென்னை போன்ற படங்களில் தனுஷ் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களுமே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

அதைத் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றிமாறனும், தனுஷும் அசுரன் திரைப்படத்தில் இணைந்தனர். இதில் தனுசுடன் இணைந்து மஞ்சு வாரியர், அம்மு அபிராமி, கேன் கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். பூமணி என்பவரின் வெக்கை எனும் நாவலை தழுவி இந்த படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படம் வெளியாகி வசூல் ரீதியாக மட்டுமல்லாமல் விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. குறிப்பாக இந்த படம் சிறந்த தமிழ் படத்திற்கான தேசிய விருதையும் வென்றது. அதுமட்டுமில்லாமல் தெலுங்கிலும் நரப்பா எனும் பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. மேலும் அசுரன் படத்தில் இடம்பெற்ற எள்ளு வய பூக்களையே எனும் பாடல் ரசிகர்கள் மனதை உருக வைத்தது.

பெற்ற மகனை இழந்த ஒரு தாயின் மன வலியை பாடல் வரிகளின் மூலம் நம் கண் முன்னே நிறுத்தி இருப்பார்கள். இந்தப் பாடலை யுகபாரதி எழுத பாடகி சைந்தவி தனது இனிமையான குரலில் பாடியிருந்தார். இந்தப் பாடல் வரிகளுக்கும் சைந்தவியின் குரலுக்கும் மயங்காதவர்கள் எவரும் இல்லை என்றே கூறலாம். இவ்வாறு அனைவரின் மனதை கவர்ந்த எள்ளு வய பூக்கலையே பாடல் உருவானது குறித்து வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறியதாவது, “ஒரு கல்லூரி நிகழ்ச்சியில் சீமான் பங்கேற்றபோது ‘பூ சிரிக்க பூ சிரிக்க பூ போல நான் சிரிக்க போனாக போனாக என் மாமன்… எப்ப வர போறாங்க காணோமே இன்னும் காணோமே….’ என்று ஒரு பாடலை பாடியிருந்தார்.

அந்த ராகம் எங்களுக்கு பிடித்துப் போக நானும் ஜி வி பிரகாசும் சீமானை நேரில் சென்று சந்தித்து பேசினோம். எல்லாம் எங்கள் பாட்டி பாடுன பாட்டு தான் என்று கூறி அந்த பாடலை பாடி காட்டினார். அதிலிருந்து ஜி வி பிரகாஷ் பாடலை உருவாக்கினார்” என்று கூறியுள்ளார். முன்னதாக இந்த பாடலை என்னிடம் கேட்டு தான் உருவாக்கினார்கள் என்று சீமானே கூறியிருந்தார். ஆனால் சீமான் கதை விடுகிறார் என்று ஊடகங்களில் பலரும் கலாய்த்தார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக வெற்றிமாறன் நேர்காணலில் இதனை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

Exit mobile version