சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம்!

0
138

சேலத்தில் வண்டி ஓட்டிய பெண்ணுக்கு சென்னையில் அபராதம் விதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டியை சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி கார்த்திகா (வயது 36). இவர் ஒரு ஸ்கூட்டர் வைத்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அலுவலக முத்திரையுடன், கார்த்திகா பெயருக்கு ஒரு தபால் வந்தது. அந்த தபாலை பிரித்து பார்த்த அவர் அதிர்ச்சி அடைந்தார்.

அதில் கடந்த 3-ந் தேதி சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட 200 அடி சாலையில் கார்த்திகா, ‘ஹெல்மெட்’ அணியாமல் அவரது ஸ்கூட்டரை ஓட்டிச்சென்றதாகவும், அதற்கு அபராத தொகையாக ரூ.100-ஐ 24 மணி நேரத்தில் செலுத்துமாறும் கூறப்பட்டு இருந்தது.

அதில் கார்த்திகாவின் ஸ்கூட்டர் பதிவு எண் குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும் இந்த அபராத தொகையை தமிழ்நாடு போலீஸ் இணையதளத்திற்கு சென்று ஆன்லைனில் கட்டுமாறும் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.

சேலம் மாவட்டத்தில் ஸ்கூட்டர் ஓட்டிய பெண்ணுக்கு, சென்னையில் அபராதம் விதித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

“தான் இதுவரை சென்னைக்கு சென்றது கூட கிடையாது. தனது ஸ்கூட்டர் பதிவெண்ணுடன் சென்னையில் வேறு ஒரு ஸ்கூட்டர் இயக்கப்படுகிறதா? என்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கார்த்திகா தெரிவித்தார்.

அந்த ஸ்கூட்டர் போலி வாகன எண்ணுடன் இயக்கப்பட்டதா? அது திருட்டு ஸ்கூட்டரா? என்பது பற்றி விசாரணை நடத்தப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.

இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து சென்னை மணலி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.

வாகன சோதனையின்போது ‘ஹெல்மெட்’ அணியாமல் செல்பவர்களின் வாகனத்தை நிறுத்தி, “நீங்கள் ஹெல்மெட் அணியாமல் சென்றதற்காக அபராதம் விதித்து கடிதம் அனுப்புவோம்” என்று கூறி அவர்கள் வாகன எண்ணை வைத்து அந்த நபருக்கு சம்மன் அனுப்புவோம்.

அதன்படி தான் அந்த ஸ்கூட்டரின் பதிவு எண்ணை வைத்து சம்மன் அனுப்பினோம். தற்போது அந்த பெண் இல்லை என்பது தெரியவந்துள்ளதால் போலி பதிவு எண்ணுடன் அந்த ஸ்கூட்டர் இயக்கப்பட்டதா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுபற்றி குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இந்த விவகாரத்தில் சேலம் போலீசார் அளிக்கும் தகவலின் பேரில் கார்த்திகா பெயருக்கு அனுப்பப்பட்ட சம்மன் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தின் மூலம் ரத்து செய்யப்படும். அவர் அபராதம் கட்ட வேண்டியதில்லை. அவர் ஸ்கூட்டர் சம்பந்தமாக வேறு எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டோம்.இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.போலி எண்ணை வைத்து வண்டி ஓட்டிய நபரை பிடிக்க வேண்டும் என பொது மக்கள் விரும்புகின்றனர்.