இனி ரேஷன் கடைகளில் பணி நியமனத்திற்கு இது அவசியம் – உயர்நீதிமன்றம் விசாரணை!
தமிழகத்தில் நியாயவிலைக் கடைகளில் உள்ள காலி பணியிடங்களை இனி தேர்வுகள் நடத்தி அதன் மூலம் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது பற்றி மயிலாடுதுறை கோமல் கிராமத்தை சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: கோமல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் கீழ் செயல்படும் தேரழுந்தூர் நியாய விலைக்கடையில் எந்தவித தேர்வு நடைமுறைகளையும் பின் பற்றாமல் அனிதா என்ற பெண்ணை நியமனம் செய்துள்ளார்கள்.
மேலும் விற்பனையாளர் பணிக்கு தேவையான கல்வித்தகுதி மற்றும் வயது தகுதி உடையோர் ஏராளமானவர்கள் உள்ள நிலையில் எந்த வித தகுதியும் இல்லாத அந்த பெண்ணை எவ்வித நடைமுறைகளும் பின்பற்றாமல் தேர்வு செய்துள்ளனர். இது குறித்து கூட்டுறவு அதிகாரிகளிடம் புகார் செய்த போது ரூ.5 இலட்சம் கொடுத்து அந்த பணியை பெற்றதாக அனிதா தெரிவித்துள்ளார்.
புகார் குறித்து பதிலளித்த கூட்டுறவு அதிகாரிகள் அனிதா என்ற பெயரில் எந்த பணியாளரும் இங்கு பணியாற்றவில்லை என தெரிவித்தனர்.மேலும் நியாயவிலைக் கடைகளில் உரிய தேர்வு நடைமுறைகளை பயன்படுத்தி விற்பனையாளர்களை தேர்வு செய்ய வேண்டும் எனவும் தற்போது தேர்வு செய்த அனிதா என்ற பெண்ணை பணி நீக்கம் செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.இந்த மனு குறித்த விசாரணை விரைவில் வருமென்று எதிர்பார்க்கப்பட்டுள்ளது.