துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

0
244

துணை மாப்பிள்ளையாக வர ஓபிஎஸ்க்கு செல்லூர் ராஜூ அழைப்பு! 

தமிழக முன்னாள் முதல்-அமைச்சர், அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், ஒருங்கிணைப்பாளராக பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் அதிமுகவை வழிநடத்தி வந்தனர்.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ம் தேதி சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டனர்.

இதனை எதிர்த்து பன்னீர் செல்வம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் அதிமுக சட்ட விதிகளுக்கு உட்பட்டே பொதுக்குழு கூட்டப்பட்டுள்ளது என்று கூறி பொதுக்குழு செல்லும் என்று உத்தரவிட்டனர்.

இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தேர்தல் நடத்தப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். இதனைத்தொடர்ந்து பொதுக்குழுவையும், பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்ததையும் அங்கீகரிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனில் அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் அதிமுக பொது குழுவில் எடுக்கப்பட்ட அணைத்து தீர்மானங்களும் செல்லும் என அறிவித்தது, இதனை அடுத்து அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கிகரிப்பதாகவும், இரட்டை இலை சின்னத்தையும் அவருக்கு வழங்கி உத்தரவிட்டது.

தலைமை தேர்தல் ஆணையத்தின் இந்த தீர்ப்பு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில், அதிமுகவுக்கு ஏற்பட்டிருந்த களங்கள் மாறி தெளிந்த நீரோடையாக, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக எந்த வித குழப்பமும் இல்லாமல் எம்ஜிஆர், ஜெயலலிதாவின் கொள்கைகளை நிலைநாட்ட போவதற்காக இந்த வெற்றி இந்த நேரத்தில் கிடைத்திருப்பதாகத்தான் நான் பார்க்கிறேன்.

பிரிந்து சென்றவர்களில் ஒரு சிலரை தவிர மற்றவர்கள் புரட்சி தலைவரின் லட்சியத்தை, திமுக என்ற தீய சக்தியை ஒழித்து குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க அனைவரும் ஒன்று திரள வேண்டும். இது திராவிட பூமி. இங்கு தேசிய கட்சிகள் எல்லாம் தனித்து நின்று கோலோச்ச முடியாது. நண்பனாக வரலாம், துணை மாப்பிள்ளையாக வரலாம்.
ஆனால் மாப்பிள்ளையாக வர முடியாது.

அதிமுகவில் 3ஆவது தலைமுறை தொடங்கிவிட்டது. படித்தவர்கள் மத்தியில் எடப்பாடியார் மீது பாச பிணைப்பு இருக்கிறது. பள்ளிக்குச் செல்லாமல் பரீட்சை எழுதாமல் பாஸ் செய்ய வைத்த தலைவர். ஏற்கெனவே உத்வேகத்துடன்தான் செயல்பட்டு வருகிறோம். எடப்பாடி பழனிசாமி சில வழிமுறைகளை சொல்லியுள்ளார். அதையெல்லாம் மாவட்டத்தில் கழக நிர்வாகிகளிடமும் கழக தொண்டர்களிடமும் சொல்லி அதை செயல்படுத்த வழிவகை செய்வோம்.

தமிழகத்தில் வலிமையான எதிர்க்கட்சியாக நாங்கள் இருக்கிறோம். எங்களை தவிர வேறு யாரும் இல்லை. சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி கேட்ட கேள்விகளுக்கு முதல்வரால் பதில் சொல்ல முடியவில்லையே. மூத்த அண்ணன் ஓபிஎஸ் வழித்தவறி போய்விட்டார். அவர் தனிக்கட்சி தொடங்குவாரா இல்லையா என்பது அவரிடம்தான் கேட்க வேண்டும். அப்படியே தொடங்கினாலும் அதிமுகவுக்கு எந்த பாதிப்பும் இல்லை. எடப்பாடி பழனிசாமியிடம் நேரம் கேட்டு அவரை ஓபிஎஸ் வந்து பார்த்தால் எல்லாம் சரியாகிவிடும். இவ்வாறு செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்