அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் அதிமுகவின் தொழிற்சங்க கூட்டத்தில் உரையாற்றினார். அந்த சமயத்தில் அவர் தெரிவித்ததாவது, அதிமுகவிலிருந்து திமுகவில் இணைந்தவர்கள் சென்ற ஆட்சி காலங்களில் அதிமுகவில் பதவி, பணம் உள்ளிட்டவற்றை சம்பாதித்து இருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆளும் கட்சியாக இருந்த சமயத்தில் கட்சியின் வேட்டியை கட்டிக்கொண்டு எதிர்க்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து விடும் பழக்கம் கொண்ட கட்சி அல்ல. ஆனாலும் திமுக அப்படி கிடையாது எதிர்க்கட்சியாக மாறினால் வேஷ்டியை மடித்து வைத்து விட்டு பேன்ட் சட்டைக்கு மாறிவிடுவார்கள் என்று தெரிவித்திருக்கிறார் செல்லூர் ராஜு.
அரை நூற்றாண்டு காலம் திமுக தலைவராகவும், ஐந்து முறை தமிழகத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்த கருணாநிதியே அதிமுகவை அசைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. அதோடு விசிலடிச்சான் குஞ்சுகள் என்று அதிமுக தொண்டர்களை விமர்சனம் செய்தார் கருணாநிதி. எம்ஜிஆர் கட்சிக்கு கேரண்டி இல்லை என்றெல்லாம் விமர்சனம் செய்தார். இருந்தாலும் அவரால் எதுவும் செய்ய இயலவில்லை. எத்தனை பேர் சென்றாலும் அதிமுக அசராது ஆகவே யார் எங்கு சென்றாலும் அதிமுக எப்போதும் ஸ்த்திரத்தன்மையுடன் இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார்.
தற்போது மாநில நிதி அமைச்சராக பதவி வகித்து வரும் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் இருந்தவர் அவர் விளம்பரத்திற்காக தான் தற்சமயம் வெள்ளை அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றார். 2026 ஆம் வருடத்திற்கு முன்னரே சட்டசபைத் தேர்தல் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதற்கான சூழ்நிலை ஏற்படலாம் அப்போது அதிமுக தான் ஆட்சிக்கு வரும் என்று தெரிவித்து இருக்கிறார்.