தேனியில் பரபரப்பு! பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!

0
172
Sensation in Theni! Farmers protest by besieging the public works department office!
தேனியில் பரபரப்பு! பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம்!
கம்பம் முல்லைப் பெரியாறு அணையின் சிறப்பு கோட்ட பொதுப்பணித்துறை அலுவலகத்தை ஐந்து மாவட்ட பெரியார் வைகை பாசன விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். சிக்கல்தேனி மாவட்டம் கம்பம் நகரில் உள்ள முல்லைப் பெரியார் அணை சிறப்பு கோட்ட பொதுப்பணித்துறை அதிகாரிகள் பெரியாறு அணைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுவதாக கூறி கம்பத்தில் உள்ள பொதுப்பணித் துறை அலுவலகத்தை ஐந்து மாவட்ட விவசாய சங்கத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளரான அன்வர் பாலசிங்கம் தலைமைலான விவசாயிகள் மற்றும் சங்க பிரதிநிதிகள், பெரியார் அணை சிறப்பு செயற்பொறியாளர் சாம் இர்வினிடம், ரூல்கர்வ் நடைமுறையால் மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்கு முல்லைப் பெரியாற்றில் இருந்து தண்ணீர் செல்வதில் சிக்கல் ஏற்படுவதாகவும், மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் அணையில் குறைந்த நீர் மட்டம் உள்ளபோதே முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதற்கும் எதிர்ப்பு தெரிவித்து நீர்வள ஆதார துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ரூல்கர்வ் முறையால் முல்லைப் பெரியாறு அணையில் போதிய நீரை தேக்க முடியாத நிலை ஏற்படுவதால் 5 மாவட்டங்களுக்கும் முழுமையாக தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் எனவும் குறிப்பாக ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு தண்ணீர் வரத்து இருக்காது எனவும் ரூவ்கர்வ் முறையை பயன்படுத்தி போதிய நீரை தேக்காமல் தண்ணீர் வெளியேற்றப்படும் போது, செப்டம்பர் மாதத்தில் மழை பெய்யவில்லை என்றால் போதிய நீர் தேவை தமிழகத்திற்கு கிடைக்காது.
எனவே, 4 லட்சம் ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக நடைபெற்ற பாசனம், தற்போது ஒரு லட்சம் ஏக்கருக்கும் குறைவாக நடைபெற்று வருவதாகவும் ரூல்கர்வ் முறையால் முல்லை பெரியாறு பாசன விவசாயிகள் அவதிப்பட்டு வருவதாகவும், ரூல்கர்வ் முறை பற்றிய சிக்கல்களை நீர் வளத்துறையால் அமைக்கப்பட்ட துணை கமிட்டியிடம் பெரியார் அணை செயற்பொறியாளர் தெளிவாக விளக்க வேண்டும் எனவும் கூறினார்.
ரூல்கர்வ் முறை என்றால் என்ன?
மேலும், வெவ்வேறு காலநிலைகளில் நீர்தேக்கத்தில் நிலை நிறுத்தக்கூடிய நீர் அளவு மற்றும் செயல்பாடுகள் குறித்த அட்டவணையே ‘ரூல்கர்வ்’ எனப்படுகிறது. இதன்படி, பெரிய அணைப் பகுதிகளில் நிலை நிறுத்தும் தண்ணீரின் அளவு காலநிலைகளின்படி மாற்றி அமைக்கப்படும். மழைகாலத்தில் அணைப்பகுதியில் குறைவான நீர் தேக்கம், கோடைகாலத்தில் அணை பகுதியில் அதிகளவு நீர் தேக்கம் செய்வதே ரூல்கர்வ் முறையாகும். அதாவது பருவ மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்போது, அணையின் நீர்மட்டத்தை உச்சபட்ச அளவுக்கு உயர்த்த முடியாது.
மார்ச், ஏப்ரல், மே ஆகிய கோடை காலத்தில் உயர்த்தலாம். இது பெரிய அணைகளுக்கு பொருந்தும். 6.5 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட சிறிய அணையில் இதனைப் பயன்படுத்துவதால் அணையில் 5 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தேக்க முடிகிறது.
இந்த முல்லை பெரியாறு அணை தண்ணீரை பயன்படுத்தி, கம்பம் பள்ளத்தாக்குப் பகுதி இருபோக பாசனத்திற்கும், பதினெட்டாம் கால்வாய், 58-ம் கால்வாய் மற்றும் ஐந்து மாவட்டங்களுக்கும் பல்வேறு வழிகளில் பாசனம் நடைபெற்று வருகிறது. ஆனால் இந்த ரூல்கர்வ் முறையால் ஐந்து மாவட்டத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய முடியாத சூழல் உள்ளது.
ரூல்கர்வ் முறை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில் நீர்வளத் துறை அமல்படுத்தி இருக்கிறது. இந்த முறையை முல்லைப் பெரியாறு அணையில் இருந்து எடுக்கும் வரை தொடர்ந்து விவசாயிகள் போராடுவோம் எனவும் முல்லைப் பெரியாறு அணை 152 அடி முழு கொள்ளளவை கொண்டுள்ள நிலையில் 135 அடியாக இருக்கும் பொழுது முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுத்துள்ளது முற்றிலும் வேதனை அளிக்கிறது.
முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை ஒரு நகைச்சுவையாக தோன்றுகிறது. முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கேரள மக்களை திருப்திப்படுத்துவதற்கான அறிவிப்பு எனவும் ரூல்கர்வ் முறையை விலக்கும் வரை தொடர்ந்து போராட தயாராக உள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.விவசாயிகள் கம்பம் பொதுப்பணித் துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதால் ஏராளமான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. விவசாயிகள் பொதுப்பணித் துறையை கண்டித்து கோஷங்கள் எழுப்பியதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.