Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சாஃப்ட்வேர் இன்ஜினியர் செய்யும் அற்புத சேவை!!

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் அமிர்தம் போன்றது. குழந்தைகள் வளருவதற்கு தாய்ப்பால் மிக முக்கியமானது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் குறைவாக கிடைக்கும் போது அவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. இதனால் அவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் தாய் இல்லாத குழந்தைகள் ஆதரவற்ற குழந்தைகளுக்கு தாய் பால் என்பது எட்டா கனியாகும்.

குழந்தைகளுக்கு முழு ஊட்டச்சத்தை அளிக்கும் தாய்ப்பால் எந்த அளவுக்கு முக்கியம் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே ஆகஸ்ட் மாதம் முதல்வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கொண்டாடப்படுகிறது. தாய் இருக்கும் குழந்தைகளுக்கு தாய் பால் கிடைக்கும். ஆனால் வேண்டாம் என்று அனாதையாக விடப்படும் குழந்தைகள், பிறக்கும் போதே தாயை இழந்த பிஞ்சுகள், போதிய தாய்ப்பால் கொடுக்க முடியாதவர்களின் குழந்தைகளுக்கு எப்படி தாய்ப்பால் கிடைக்கும்?

இதனை உணர்ந்த, திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்த ரூபா செல்வநாயகி என்ற இளம்பெண் ‘அமிர்தம் தாய்ப்பால்’ (Amirtham breastmilk donation) என்ற அமைப்பின் மூலம், தாய்ப்பாலை தானமாக பெற்று ஆதரவற்ற குழந்தைகளுக்கு கொடுக்கும் பணியை சேவையாகவே செய்து வருகிறார். இவர் சாப்ட்வேர் இன்ஜினீயராக, கோவையில் உள்ள நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.

தனி ஒருவராக கோவை அரசு மருத்துவமனை மூலம் இந்த சேவையை செய்து வருகிறார். இந்த சேவையில் திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களை சேர்ந்த, 1,000க்கும் மேற்பட்ட தாய்மார்களை சமூக வலைதளங்கள் மூலம் ஒன்று சேர்த்துள்ளார். பிரசவித்த தாய்மார்கள், தங்கள் குழந்தைக்குப்போக எஞ்சியுள்ள தாய்ப்பாலை சேகரித்து, அவரவர் வீடுகளில் உள்ள குளிர்சாதன பெட்டியில் சேகரித்து வைக்கின்றனர். அவற்றை மாதத்திற்கு ஒருமுறை சென்று சேகரித்து, கோவை அரசு மருத்துவமனையில் உள்ள தாய்ப்பால் வங்கிக்கு வழங்கி வருகிறார். அங்கு மருத்துவர்களின் பலகட்ட பரிசோதனைக்கு பின், ஓராண்டு வரை சேகரித்து தாய்ப்பால் தேவைப்படும் பச்சிளம் குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது.

கடந்த இரண்டரை ஆண்டு சேவையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தாய்மார்களை ஒன்று சேர்த்து சுமார் 800 லிட்டர் தாய்ப்பாலை தானமாக பெற்று தந்திருக்கிறார். கோவை அரசு மருத்துவமனை டாக்டர்கள் அளிக்கும் ஒத்துழைப்பு, ஊக்கமே இந்த சேவையை தொடர முக்கிய காரணமாக உள்ளது என்று ரூபா கூறுகிறார். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு இதை கொடுப்பதன் மூலம் ஆரோக்கியத்துடன் வாழ்கின்றனர்.

இது, மனதுக்கு ஆத்ம திருப்தியை தருகிறது. தாய்ப்பால் தானம் குறித்த விழிப்புணர்வு போதியளவில் இல்லை. இதை உணர்ந்து தாய்மார்கள் தாய்ப்பால் தானத்தில் தங்களை இணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் ரூபா கூறியுள்ளார். ரூபா மட்டுமல்ல தாய்ப்பால் கொடுத்த அனைவரும் முகமறியாத குழந்தைகளுக்கு தாயாக உயர்ந்து நிற்கின்றனர்.

Exit mobile version