முதல் மதிப்பெண் வாங்காமலே இருந்திருக்கலாம்.. டிரோல்களால் மனமுடைந்த பள்ளி மாணவி!!
உத்தரப்பிரதேச மாநிலத்தில் நடந்த 10 ஆம் வகுப்பு பொதுச் தேர்வு முடிவுகள் அண்மையில் வெளியானது. இதில் பிராச்சி நிகாம் என்ற மாணவி 600 க்கு 591 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தார். இதனால் மாணவி பிராச்சியின் புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலானது.
ஆனால் மாணவியை பாராட்ட வேண்டிய பலரும் அவரின் உருவத்தை பார்த்து உருவ கேலி செய்வதோடு, சோசியல் மீடியாவில் டிரோல் செய்யவும் தொடங்கினார்கள். ஏனெனில் மாணவி பிராச்சிக்கு ஹார்மோன் பிரச்சனை காரணமாக முகத்தில் ஆண்களை போன்று முடிகள் வளர்ந்துள்ளன. இதனால் அவரின் புகைப்படத்தை பார்த்த பலரும் அவரை கேலி செய்து வருகிறார்கள்.
இதுபோன்ற உருவ கேலியால் மனமுடைந்த மாணவி பிராச்சி அவரின் வேதனையை சிரித்து கொண்டே பகிர்ந்துள்ளார். அதன்படி இதுகுறித்து அவர் பேசியதாவது, “என் சாதனையை விட டிரோல்களே அதிகமாக உள்ளன. நான் செய்த சாதனைக்கு பதிலாக உருவ கேலிகள் தான் அதிகமாக டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு நான் தேர்வில் முதல் இடம் பெறாமலே இருந்திருக்கலாம்.
நான் முதல் பெற்றதால் தானே எனது புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியானது. ஒருவேளை நான் முதல் இடம் பெறாமல் இருந்திருந்தால் நான் சோசியல் மீடியாவில் அறியப்படாமல் இருந்திருப்பேன். எனது முகத்தில் வளர்ந்துள்ள முடிகளால் இதுபோன்ற டிரோல்களுக்கு ஆளாகி இருக்க மாட்டேன். இருப்பினும் ஒரு சிலர் எனக்கு ஆதரவாக பேசுகிறார்கள். என்னை டிரோல் செய்பவர்களுக்கு இது ஹார்மோன் பிரச்சனையால் வளரும் முடி என விளக்கம் அளிக்கிறார்கள்.
நான் என்ஜினியராக வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். இதற்காக ஐஐடி – ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுத உள்ளேன். சோசியல் மீடியாவில் என்னை டிரோல் செய்பவர்களில் பலர் இதை தான் முழுநேர வேலையாக செய்து வருகிறார்கள். ஆனால் நான் அப்படி அல்ல. எனக்கு வெற்றிதான் முக்கியம். என் உருவத்திற்காக ஆசிரியர்களோ சக மாணவர்களோ ஒரு நாளும் என்னை கேலி செய்ததில்லை. நானும் இதைப்பற்றி எல்லாம் கவலைப்பட்டதே இல்லை” என மிகவும் தைரியமாக பேசியுள்ளார்.