பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அவர்கள் ரேஷன் கடைகளில் மக்களுக்கு போதுமான அளவு துவரம் பருப்பு வழங்கப்படுவதில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். முக்கியமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு துவரம் பருப்பானது வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன் வைத்துள்ளார்.
இதற்கு அமைச்சர் சக்கரபாணி அவர்கள், ரேஷன் கடைகளில் துவரம் பருப்பின் அளவானது போதுமான அளவு உள்ளது என்றும், மக்களுக்கு சரியான முறையில் விநியோகிக்கப்படுகிறது என்பதையும் அறிக்கையாக வெளியிட்டிருக்கிறார்.
அமைச்சர் சக்கரபாணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-
நவம்பர் மாதத்திற்கான துவரம் பருப்பு ஒதுக்கீடு குடும்ப அட்டைதாரர்களுக்கு துரிதமாக தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. நவம்பர்-2024 மாதத்தில் சென்னை உட்பட அனைத்து மாவட்டங்களுக்கும் 2,03,84,122 கிலோ துவரம் பருப்பு ஒதுக்கீடு செய்யப்பட்டு 22 நவம்பர் 2024 (நேற்று) வரை 1,62,83,486 கிலோ வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 92% நியாய விலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
மேலும், சென்னை மண்டலங்களை பொறுத்தவரை, மொத்தமுள்ள 1794 கடைகளுக்கு 14,75,019 கிலோ துவரம் பருப்பு வழங்கப்பட்டு, நவம்பர் மாத ஆரம்ப இருப்பையும் சேர்த்து 87% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. சென்னையைச் சுற்றியுள்ள திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அவற்றிற்கான ஒதுக்கீட்டில் முறையே 96%, 94% மற்றும் 97% துவரம் பருப்பு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டிலுள்ள அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 68,44,719 கிலோ துவரம் பருப்பு இருப்பு உள்ளது. அதுமட்டுமன்றி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கிடங்குகளில் 66,91,000 கிலோ துவரம் பருப்பு கையிருப்பு உள்ளது என்றும் அவர் அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, தவறான செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், துவரம் பருப்பு விநியோகத்தில் எந்தவிதத் தட்டுப்பாடும் இல்லை, எதிர்காலத்திலும் தட்டுப்பாடுகள் ஏற்படாத வண்ணம் சீரிய முறையில் தொடர்ந்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்களது தலைமையிலான அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது என்பதனை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்.