தமிழகம் மட்டும் இன்றி இந்தியாவின் ஒரு முனையாக திகழும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு வருகிற டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய இரு தினங்கள் வெள்ளி விழா கொண்டாட இருப்பதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் மகிழ்ச்சியோடு அறிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-
வடக்கே உள்ள வானுயர்ந்த இமயமலைக்கு நிகராக தெற்கே குமரிமுனையில் தமிழ்மலையாக வள்ளுவர் சிலையை உருவாக்கினார் மறைந்த முதல்வர் கருணாநிதி அவர்கள்.
கடல் அலைகள் தாலாட்டும் குமரிக்கடல் நடுவே அய்யன் திருவள்ளுவருக்கு 2000-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 133 அடியில் வானுயர் புகழுக்குச் சாட்சியமாக சிலை அமைத்தார். அந்தச் சிலை அமைக்கப்பட்டு கால் நூற்றாண்டு ஆகிறது. வெள்ளிவிழா காண்கிறது வள்ளுவனார் சிலை என்று முதல்வர் அவர்கள் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இதனை மிகச் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்றும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் வெள்ளி விழா நிகழ்ச்சிகள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.
இந்த உலகத்துக்கே பொதுமறை வழங்கியவர் நம் அய்யன் திருவள்ளுவர். சாதி, மத பேதங்களை கடந்து தமிழினத்தை ஒற்றுமைப்படுத்த திருவள்ளுவர் தந்த ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்பதை வாழ்வியலாக பாமர மக்களின் உள்ளங்களிலும் பதிய வைத்து, உதடுகளை உச்சரிக்க வைத்தது திராவிட இயக்கம் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.
திராவிட முன்னேற்ற கழகம் இந்த சிலையினை அமைப்பதற்காக பட்ட கடினங்களையும் வீடியோ பதிவில் முதல்வர் அவர்கள் பேசியுள்ளார். அது பின்வருமாறு :-
குமரியில் சிலை அமைக்க 1975-ஆம் ஆண்டே திட்டமிட்டாலும், அவருடைய கனவு 2000-ஆம் ஆண்டுதான் நிறைவேறியது என்று கூறினார். மேலும் இந்த சிலையினை வடிவமைக்க கணபதி ஸ்தபதியாரிடம் கூறப்பட்டது என்றும் அதில் அவர் தெரிவித்திருக்கிறார்.
கணபதி ஸ்தபதியார், 133 அதிகாரங்களை குறிக்கின்ற வகையில் 133 அடியில் சிலை அமைத்தார். சிலை வடிவமைக்கின்ற பணி நடைபெறும்போது, ‘சிலை நிற்குமோ நிற்காதோ’ என்று சந்தேகமாக கேட்டவர்களிடம் எல்லாம், ஸ்தபதி, ‘அலையும் மலையும் இருக்கும் வரை சிலை அசையாது இருக்கும், கவலைப்படாதீர்கள்’, என்று சொன்னார் என்றும் முதல்வர் அவர்கள் பகிர்ந்திருக்கிறார்.