Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சீதா தேவியை மனதில் நிறுத்தி விரதமிருப்பது எதற்காக?

இன்னமும் கிராமப்புறங்களில் பெண்கள் அவருடைய கணவரின் உடல் நலத்திற்காகவும், ஆரோக்கியத்திற்காகவும், சீதா தேவியை வேண்டி விரதமிருக்கும் முறை கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதோடு இப்படி விரதம் இருந்தால் குடும்பத்தில் அமைதியான ஒற்றுமையான வாழ்க்கை நிகழும் என்பது ஐதீகமாக இருந்து வருகிறது.

நான் எனது கணவருடன் தான் இருப்பேன், எந்த நிலையிலும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுக்காமல் ஆதரவாக இருந்து வாழ்க்கை நடத்துவோம் என்று ஒரு பெண் உறுதியான நிலையை மேற்கொள்வதற்காக இந்த விரதம் கடைபிடிக்கப்படுகிறது.

சீதா ஜெயந்தி என்றழைக்கப்படும் இந்த நாள் வைசாகா மாதத்தின் சுக்ல பக்ஷ தின்போது நவமி திதியில் கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் திருமணமான பெண்கள் தங்களுடைய கணவரின் ஆரோக்கியத்திற்காகவும், அமைதியான ஒற்றுமையான வாழ்விற்காகவும், சீதா தேவியை மனதில் வேண்டி விரதம் இருந்தால் இனிய குடும்ப வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை.

திருமணம் தள்ளிப்போகும் கன்னிப் பெண்களும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். ராமபிரானை போல அழகும், அன்பும், நிறைந்த கணவன் கிடைப்பார் என்பது ஐதீகம்.

விடியற்காலையில் எழுந்து குளித்து முடித்துவிட்டு, பூஜையறையை சுத்தம் செய்து சீதை, ராமர், லட்சுமணன் மற்றும் அனுமன் உள்ளிட்டோர் சேர்ந்திருக்கும் புகைப்படத்திற்கு சந்தனம், குங்குமம், வைத்து மலர்கள் சூட்டி ஒரு சிறிய பலகை மீது வைக்கவேண்டும்.

விளக்கையேற்றி சீதா சகஸ்ரநாமத்தை தெரிவித்து மலர்களால் அன்னைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் என்கிறார்கள்.

அப்போது சீதாவிற்கு பிரசாதமாக பழம்,சர்க்கரைப்பொங்கல் போன்றவற்றை படைத்து வழிபடலாம். அதன்பிறகு சீதாதேவியின் வாழ்க்கை கதையை படிக்க அன்னையின் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்கள்.

இந்த விரதத்தை மேற்கொள்ளும் காலங்களில் திட உணவுகளை தவிர்த்து பழம், பால், மோர், தண்ணீர், இளநீர், போன்ற திரவ உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

இன்று அருகிலிருக்கும் ராமர் கோவிலுக்கு சென்று ராமபிரான், சீதா தேவியின் தரிசனம் செய்து மகா அபிஷேகம் ஆரத்தி உள்ளிட்டவற்றை காணலாம். வீட்டில் ராமாயணம் படிக்க இயலாதவர்கள் கோவிலில் நடக்கும் கதாகாலட்சேபம் கேட்கலாம்.

வம்புப்பேச்சுக்களை குறைத்து அன்யையும், ராமபிரானின் பக்தியுடனும் தூய்மையான மனதுடனும், வழிபட்டால் தியாகம் அர்ப்பணிப்பு தாய்மை உணர்வு உள்ளிட்ட குணங்கள் நமக்கு அன்னையின் மூலமாக வந்து சேரும்.

அதோடு கணவனுடன் என்றென்றும் ஒற்றுமையுடன் சீரும் சிறப்புமாக சௌபாக்கியவதியாக வாழவும் அன்னை அருள் புரிவார்.

Exit mobile version