ஊரடங்கில் மக்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யும் இளம் மருத்துவர்! குவியும் பாராட்டு
இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்புபானது நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்த வண்ணமேயுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலைக் கடுப்படுத்த மத்திய அரசு ஏற்கனவே பிறப்பித்திருந்த ஊரடங்கை நீட்டித்து அறிவித்துள்ளது. இதனையடுத்து கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட இந்த ஊரடங்கு வரும் மே 3 ஆம் தேதி வரை தொடரும்.மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவு கட்டுபாடுகள் சில இடங்களில் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் கொரோனா அதிகம் பாதித்த ஒரு சில மாநிலங்களில் முழு ஊரடங்கு தற்போதும் அமலில் உள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் நாளுக்கு நாள் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வரும் சூழ்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று அதிகமுள்ள மாவட்டங்களில், முழு ஊரடங்கை பிறப்பித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்த ஊரடங்கு காலத்தில் வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே முடங்கியுள்ள மக்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை உதவிகளை அரசியல் கட்சியினரும், தொண்டு நிறுவனங்களும் மற்றும் தன்னார்வலர்களும் தொடர்ந்து செய்து வருகின்றனர். அந்தவகையில் ஊரடங்கில் மருத்துவம் செய்ய பணமில்லாமல் ஏழை எளிய பொது மக்கள் சிரமம் அடைவதை உணர்ந்த மருத்துவர் ஒருவர், தன்னுடைய மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளித்து வருகிறார்.
சிவகங்கை மாவட்டத்திலுள்ள கண்டனூரைச் சேர்ந்தவர் மருத்துவர் பூபதிராஜா. ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்த இவர், பின்னர் தான் வசிக்கும் ஊரிலேயே சொந்தமாக கிளினிக் ஒன்றை ஆரம்பித்து கடந்த 5 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.
மருத்துவர் பூபதிராஜா தான் வசிக்கும் சொந்த ஊரில் கிளினிக் நடத்துவதலால் அந்த மாவட்டத்திலேயே பொது மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். மாவட்ட அளவில் சிறந்த சிகிச்சை அளிக்கும் மருத்துவர் என இவர் மக்கள் மத்தியில் பெயரெடுத்துள்ளார். இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுபடுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சமூக இடைவெளியை கடைபிடிக்க கருதி தனது கிளினிக்கை மருத்துவர் பூபதிராஜா மூடியுள்ளார்.
இதனையடுத்து இந்த ஊரடங்கு நேரத்தில் பிற மருத்துவமனையில் வசூலிக்கும் அதிக கட்டணத்தை செலுத்தி மருத்துவ சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியவில்லை என்றும், அரசு மருத்துவமனை௪ தொலைத் தூரத்தில் உள்ளதால் அங்கு சென்றும் சிகிச்சை பெற முடியாத சூழலில் உள்ளதால் அவருடைய கிளினிக்கை திறக்கும்படி ஊர் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதனையடுத்து மருத்துவர் பூபதிராஜா ஊர் மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு பிறகு போதுமான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட பின்னர் மீண்டும் அவருடைய கிளினிக்கை திறந்துள்ளார். இந்த முறை அவரிடம் சிகிச்சைக்கு வரும் யாரிடமே பணம் எதுவும் பெற்றுக் கொள்ளாமல் முற்றிலும் இலவசமாக சிகிச்சை அளிக்க முடிவு செய்த மருத்துவர் பூபதிராஜா, தற்போது வரை பொது மக்களிடம் கட்டணம் ஏதும் வசூலிக்காமல் அவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்.
குறிப்பாக அவரிடம் சிகிச்சைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளுக்கு பரிசோதனை செய்து மருந்துகளை மட்டும் தற்போது எழுதிக் கொடுத்துவருகிறார். மேலும் பணம் இல்லாத சிலருக்கு தனது சொந்த செலவில் மருந்தும் வாங்கிக் கொடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, முககவசம் இல்லமால் தன்னுடைய கிளினிக்கிற்கு வரும் நோயாளிகளுக்கு தனது கிளினிக் வாசலில் ஒரு பெட்டியில் முககவசம் வைத்து அவர்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறார்.
இவரிடம் தினம் கூலி தொழிலாளர்கள், ஆதரவற்றோர் என 50 க்கும் மேற்பட்டோர் தினமும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். இப்படி கட்டணம் வசூலிக்காமல் சிகிச்சை அளிக்கும் மருத்துவரை சிகிச்சை பெற்ற அப்பகுதி பொது மக்கள் மனமார பாராட்டிச் செல்கின்றனர். மேலும் இந்த ஊரடங்கு நேரத்தில் இலவசமாக மருத்துவம் பார்க்கும் இந்த மருத்துவரின் அரிய சேவைக்கு சமூகவலைதளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.