கோடைக்காலம் தொடங்கி விட்டாலே பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி வர ஆரம்பித்து விடும். தென்னிந்தியாவில் பாம்பு கடியால் அதிகம் பாதிக்கப்படுவதில் தமிழகம் தான் முதன்மை மாநிலமாக இருப்பதாக, அதிர்ச்சி தகவலையும் கூறுகிறார்கள் பாம்பு கடி ஆராய்ச்சி வல்லுநர்கள்.
அப்படி வீட்டுக்குள் பாம்பு வந்து விட்டால் வனத்துறை அல்லது தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.
அதே நேரத்தில் கோடை காலத்தில் எந்த மாதிரியான பாம்புகள் வீடுகளை நோக்கி வரும்? அப்படிப்பட்ட பாம்புகள் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்த விளக்கத்தை தற்போது காண்போம்.
இந்தியாவில் சுமார் 362 வகை பாம்புகளில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை, சமவெளி என பல பகுதிகளில் 134 வகையான பாம்புகள் உலாவி வருவதாக ஊர்வனம் இயற்கை மற்றும் விலங்குகள் பாதுகாப்பு குழுவினர் கூறுகின்றனர்.
இதில் 86 வகை பாம்புகள் நஞ்சில்லாத பாம்புகள் எனவும், மீதமுள்ள 48 வகை பாம்புகள் மட்டுமே நஞ்சுள்ள பாம்புகள் எனவும் வகைப் படுத்தப்பட்டுள்ளன. இந்த 48 வகை நஞ்சுள்ள பாம்புகளில் 20 வகை பாம்புகள் ஆபத்து இல்லாதவை எனவும், மீதமுள்ள பாம்புகளில் 17 வகை பாம்புகள் தான் அதிகம் நஞ்சுள்ள பாம்புகள் எனவும் கூறப்படுகிறது.
இந்தியாவில் வருடத்துக்கு 10 லட்சம் பேர் பாம்பு கடிக்கு ஆளாகிறார்கள். இதில் 58 ஆயிரம் பேர் உயிர் இழக்கிறார்கள் எனக் கூறுகிறது ஐ. சி. எம். ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம். இந்தியாவில் பாம்பு கடிக்கு ஆளாகும் 100 பேரில் 95 பேர் நஞ்சு இல்லாத பாம்புகளாலும், ஐந்து பேர் மட்டுமே Big Four எனப்படும் பெரியவகை நஞ்சுள்ள பாம்புகளால் பாதிக்கப்படுகிறார்கள் எனக் கூறப்படுகிறது.
குறிப்பாக கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நாகப்பாம்பு ஆகிய விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் குடியிருப்புகளை ஒட்டியே வாழக்கூடியவை. சுருட்டை விரியன் எனும் அதீத நஞ்சுள்ள பாம்பு அதிக வெப்பம் உள்ள பாறைகள் நிறைந்த பகுதிகளில் தான் வாழும்.
இதனால் அதை ஒட்டி உள்ள மக்கள் சுருட்டை விரியன் பாம்பு கடித்து உயிரிழப்பது அதிகம். வழக்கமான காலங்களை விட கோடை காலங்களில் பாம்புகள் குடியிருப்புகளை நோக்கி ஏன் வருகின்றன? என்பதையும் பாம்பு ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.
அதாவது பறவைகள், பாலூட்டிகள் சூடான ரத்தப் பிராணிகள் என அழைக்கப்படுகின்றன. அதுவே மீன், தவளை, பல்லி, பாம்பு போன்ற ஊர்வன, நீர்வாழ் உயிரினங்கள், பூச்சிகள் மற்றும் பிற முதுகெலும்பற்ற உயிரினங்கள் குளிர் ரத்தப் பிராணிகள் என வகைப்படுத்தப்படுகின்றன.
இதனால் பாம்பானது கோடை வெப்பம் அதிகமாகும் பொழுது குளிர்ச்சியுள்ள, கதகதப்பான இடங்களை நோக்கி வர ஆரம்பிக்கிறது. இதில் கண்ணாடி விரியன், கட்டுவிரியன், நாகப்பாம்புகள் உள்ளிட்ட கொடிய நஞ்சுள்ள பாம்புகள் வீட்டிற்கு அருகிலேயே உயிர் வாழ்வதால், உடனே அவை வீட்டை நோக்கி வரும் என எச்சரிக்கிறார்கள்.
மேலும் சமவெளியில் வாழக்கூடிய சாரைப்பாம்பு, கொம்பேறி மூக்கன், தண்ணீர் பாம்புகளான காளியான்குட்டி, கண்டங்கண்டை, நீர்க்கோழி போன்றவை மண்ணுளிப் பாம்பு, ஓலை பாம்பு, புழு பாம்பு, எண்ணெய் பனையன், சிவப்பு மண்ணுளிப் பாம்பு, மோதிர வளையன், ஓடுகாலி பாம்பு, பச்சை பாம்பு என 24 வகை நஞ்சற்ற பாம்புகளும் கோடைகாலத்தில் குடியிருப்புகளை நோக்கி வருவதற்கான வாய்ப்பு அதிகம் எனவும் கூறுகின்றனர்.
அதுவும் கோடைகாலத்தில் முட்டையிலிருந்து பாம்புகள் வெளிவரும் காலம் என்பதால், இந்த காலகட்டத்தில் வீட்டை நோக்கி குட்டி பாம்புகள் வரும் என பீதியை கிளப்புகிறார்கள்.
பாம்புகள் முக்கிய உணவாக தவளைகள் மற்றும் எலிகளை தான் சாப்பிடும். தவளைகள் வாழக்கூடிய குளம், குட்டைகள் பெரும்பாலும் ஆக்கிரமிப்புகளால் அழிக்கப்பட்டு விட்டன. அப்படியே இருந்தாலும் கோடை காலங்களில் வறட்சியாக இருப்பதால் தவளைகளும் இருக்காது. இதனால் பாம்புகளின் அடுத்த டார்கெட் எலிகள்தான்.
எலிகள் எங்கே இருக்கும்? உணவு குப்பைகள் அதிகமாக போடப்பட்டு இருந்தால் அங்கே தானே இருக்கும்? ஆக உணவு குப்பைகள் போடப்பட்ட இடத்திற்கு எலியை தேடி பாம்புகள் கொலை பசியோடு வர ஆரம்பிக்கும். அதனால் குடியிருப்புகளை ஒட்டி உணவு குப்பைகளை போடுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
அடுத்ததாக காற்றுக்காக மக்கள் பலரும் தரையில் படுப்பது வழக்கம். இது போன்ற நேரங்களில் கொசு வலை போன்ற பாதுகாப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சில பாம்புகள் கதவு வழியாக நைசாக உள்ளே வரக்கூடும். சமையலறை, பாத்திரம் கழுவும் தொட்டிகள், குழாய்கள் வழியாகவும் வரும். எனவே கதவுகளை மூடி எச்சரிக்கையாக இருந்து கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வெளியே ஷூக்களை வைப்பதை தவிர்த்து, ஏதாவது ஆணி போன்ற அமைப்புகளில் தொங்கவிடுவது பாதுகாப்பானது. காரணம் ஷுவுக்குள் சிறு பாம்புகள் உள்ளே புகுந்து ஒளிந்து கொள்ளும். உதறினால் கூட வெளியில் வராது.
இரவில் பாம்புகள் வெளியில் சாலைகளில் உலாவிக் கொண்டிருப்பதால், டார்ச் லைட் இல்லாமல் வெளியில் செல்லக் கூடாது எனவும் எச்சரிக்கிறார்கள்.
கோடையில் வெப்பம் கொஞ்சம் குறைவாக இருக்கும் கட்டிட இடுக்குகள், அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் செங்கல்களிலும் பாம்புகள் அண்டி இருக்கும். வீடுகளை சுற்றி விறகுகள், அட்டைப் பெட்டிகள், தேவையற்ற பொருட்களை குவிப்பதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் ஓட்டை போன்றவை இருந்தால் அதனை அடைத்து வைக்க வேண்டும். மேலும் வீட்டின் கழிவு நீர் குழாய்களை வலை போன்ற அமைப்புகளில் மூலம் மூடி வைக்க வேண்டும். இரவு நேரங்களில் வீடுகளை சுற்றி வெளிச்சம் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
வீட்டிற்கு வெளியே குளியலறை, கழிவறை போன்றவை இருந்தால் அவற்றை சுத்தமாகவும், வெளிச்சத்தோடும் வைத்திருக்க வேண்டும். இதனையும் மீறி வீட்டிற்குள் பாம்புகள் வந்துவிட்டால்
044-222 00 335 என்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும்.