சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

0
131

சோனியா மன்மோகன் குடும்பத்திற்கு புதிய பாதுகாப்பு! மத்திய அரசு அறிவிப்பு

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி குடும்பத்தினருக்கு ராகுல் காந்தி, மகள் பிரியங்கா காந்தி உட்பட இதுவரை எஸ்.பி.ஜி. என்று அழைக்கப்படுகிற சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் பாதுகாப்பு மத்திய அரசால் அளிக்கப்பட்டு வந்தது. இதே போன்று முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண் கவுர் ஆகியோருக்கும் எஸ்.பி.ஜி. பாதுகாப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் மத்திய அரசு அதிரடியாக சோனியா காந்தி, மன்மோகன் சிங் குடும்பத்தினருக்கு அளித்து வந்த இந்த பாதுகாப்பை ரத்து செய்து விட்டது. அதற்கு பதிலாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் இசட்-பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டது.

இவர்களின் பாதுகாப்புக்காக குறைந்தது மேலும் 1000 போலீசார் வேண்டும் என்று மத்திய ரிசர்வ் போலீஸ் படை கேட்டு உள்ளது.

மேலும், சோனியா காந்தி குடும்பத்துக்கான புதிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தின் மூலம் மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம் எழுதி உள்ளது.

அதில், “ சோனியா காந்தி மற்றும் மன்மோகன்சிங் குடும்பத்துக்கு ஏ.எஸ்.எல். நடைமுறை (முன்கூட்டியே தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்து பாதுகாப்பு அளிக்கும் நடைமுறை) பின்பற்றப்படுகிறது. எனவே இதில் மாநில அரசுகள், யூனியன் பிரதேசங்கள் உளவு தகவல்கள் தந்து உதவ வேண்டும்; போலீசாரை அளித்து உதவ வேண்டும்; நிர்வாக உதவிகளை செய்ய வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதாவது சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங், குர்சரண் கவுர் ஆகியோர் தங்கள் மாநிலங்களுக்கு அலுவல் ரீதியிலான பயணமாகாவோ, தனிப்பட்ட பயணமாகவோ வருகிறபோது, அந்தந்த மாநிலங்கள் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த தலைவர்கள் செல்லக்கூடிய இடங்களுக்கு குறைந்தபட்சம் 24 மணி நேரத்துக்கு முன்பாகவாவது மத்திய ரிசர்வ் போலீஸ் படை சென்று பாதுகாப்பு பணிகளை ஆய்வு செய்ய வேண்டும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. சிறப்பு பாதுகாப்பு படையினர் பயன்படுத்தி வந்த குண்டு துளைக்காத வாகனங்களை சோனியா காந்தி குடும்பத்தினர் பாதுகாப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.

அதே நேரத்தில் மன்மோகன் சிங், குர்சரண் கவுர் பாதுகாப்புக்கென கூடுதல் கவச வாகனங்களை கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு மத்திய ரிசர்வ் போலீஸ் படை கடிதம் எழுத இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

தற்போது 3 லட்சத்துக்கும் அதிகமான காவலர்களை கொண்டுள்ள மத்திய ரிசர்வ் போலீஸ் படை, 57 மிக முக்கிய பிரமுகர்களுக்கு (வி.வி.ஐ.பி.) பாதுகாப்பு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.