விரைவில் அதிமுக தினகரன் வசமாகும்..அடித்து கூறிய அண்ணாமலை..!!
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பாஜக சார்பில் கோவை தொகுதில் போட்டியிடுகிறார். இருப்பினும் இதர வேட்பாளர்களை ஆதரித்து அவர்களுக்காக பிரச்சாரமும் செய்து வருகிறார். அந்த வகையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக டிடிவி தினகரன் தேனி தொகுதியில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில் தினகரனை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நேற்று தேனியில் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “எடப்பாடி பழனிச்சாமி அதிமுகவை ஒப்பந்தகாரர்களுக்கு தாரைவார்த்து விட்டார் என்பது அவர் நிறுத்தியிருக்கும் வேட்பாளர்களை பார்த்தாலே தெரியும். இதையெல்லாம் மறைந்த ஜெயலலிதா பார்த்து கொண்டு தான் இருக்கிறார்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் டிடிவி தினகரன் பக்கம் தான் உள்ளனர். ஜூன் 4ஆம் தேதிக்கு எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக இருக்காது. நிச்சயம் அதிமுக டிடிவி தினகரன் வசமாகும். முன்பாகவே தினகரன் கையில் அதிமுக சென்றிருந்தால் ஸ்டாலின் வெற்றி பெற்றிருக்க மாட்டார். அதிமுக தொண்டர்கள் அனைவரும் தினகரனுக்கு தான் ஆதரவளித்து வருகிறார்கள்” என்று கூறியுள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக சசிகலா, ஓபிஎஸ், ஈபிஎஸ் என்று பலரின் கைகளுக்கு சென்று கட்சியே இரண்டாக பிரிந்து காணப்படுகிறது. பெரும்பாலான அதிமுக தொண்டர்கள் ஈபிஎஸ் தலைமையை விரும்பவில்லை என்றே தெரிகிறது. இப்படி உள்ள சூழலில் அண்ணாமலை இவ்வளவு அழுத்தமாகவும், திட்டவட்டமாகவும் கூறியிருப்பது சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.