பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களுக்கு போக்குவரத்து வசதியை ஏற்படுத்தி தரும் விதமாக 109 சிறப்பு பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படவுள்ளன.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக கடந்த மார்ச் 23ம் ஊராடங்கானது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மார்ச் 27-ஆம் தேதி நடைபெற இருந்த பத்தாம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு ஜூன் ஒன்றாம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது. நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட, ஜூன் ஒன்றாம் தேதி நடைபெறவிருந்த பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 15 முதல் 25 வரை நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறையால் அறிவிக்கப்பட்டது.
இந்த முறை அறிவிக்கப்பட்ட தேதியில் இருந்து பின்வாங்கும் முடிவில் பள்ளிக்கல்வித்துறை இல்லை. எனவே தேர்வெழுதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு வசதியை ஏற்படுத்தித் தருவதை கணக்கில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.அந்தவகையில்,
இன்று முதல் 13-ம் தேதி வரை ஹால் டிக்கெட் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருவதால் சென்னைக்கு அருகேயுள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, சென்னை மாநிலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் கிட்டத்தட்ட 63 வழிப்பாதைகள் 109 சிறப்பு பேருந்துகள் மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இயக்கப்பட உள்ளது.
இந்த பேருந்துகளில் மாணவர்களும், ஆசிரியர்களும் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். பிற மக்களுக்கு அனுமதி இல்லை. அவர்கள் இந்த பேருந்தை அடையாளம் காணும் விதமாக பேருந்தின் முன்புறம் பள்ளிக் கல்வித்துறைக்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு இருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பயணம் செய்யும் மாணவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
ஆனால் ஆசிரியர்கள் கட்டணம் செலுத்தி பயணச்சீட்டு பெற்று பயணம் செய்ய வேண்டும். காலை 9 மணிக்கு புறப்படக் கூடிய இந்தப் பேருந்துகள் மாலை 4 மணிக்கு மறுமுனையில் இருந்து புறப்படும். அதேபோல்,
மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் விதமாக பேருந்தில் 60 சதவிகிதம் அதாவது 24 பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்தில் பின்புறமாக ஏறி முன்புறமாக இறங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.