Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

காளஹஸ்தி ஆலயத்தின் சிறப்புகள்..!!

சிவனின் பஞ்சபூத ஸ்தலத்தில் மிகவும் முக்கியமான ஸ்தலம் என்றால் இந்த காளஹஸ்தி ஆலயம் தான். வயிறு குடைச்சல் உள்ளவர்கள், மன அழுத்தம் உள்ளவர்கள், தூங்கும் பொழுது கூட நிம்மதி இல்லாமல் இருப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு சென்று வருவது மிகவும் சிறப்பானதாக இருக்கும். இந்த காளஹஸ்தி கோவிலுக்கு திருமணத்தில் தடை இருப்பவர்கள், ராகு கேது வினால் பாதிப்பு அடைந்தவர்கள் தான் அதிகம் செல்வார்கள் என்று கூறுவர்.

ஆனால் அனைத்துவித பிரச்சனைகளுக்கும் இந்த கோவிலுக்கு சென்று வந்தால் ஒரு நல்ல தீர்வு கிடைக்கும். முடிந்தவர்கள் மாதம் மாதமும் இந்த கோவிலுக்கு சென்று வரலாம், அல்லது ஆறு மாதத்திற்கு ஒரு முறையும் இந்த கோவிலுக்கு சென்று வரலாம். இவ்வாறு இந்த கோவிலுக்கு சென்று வருவதன் மூலம், நமது வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவதை கண்கூடாக காண முடியும்.

ராகு கேது திசை நடக்கும் பொழுது மட்டும் இந்த கோவிலுக்கு பெரும்பாலும் மக்கள் சென்று வருவார்கள். ஆனால் 9 வகையான திசை நடக்கும் பொழுதும், இந்த கோவிலுக்கு செல்லலாம். அத்தகைய சிறப்பு வாய்ந்தது இந்த கோவில். அஸ்வினி, மகம், மூலம், திருவாதிரை, சுவாதி, சதயம் ஆகிய நட்சத்திரக்காரர்களுக்கு இந்தக் கோவிலில் உள்ள கடவுளானவர், குலதெய்வம் போன்று இருக்கக் கூடியவர்.

ராகு கேது திசை, சர்ப்ப தோஷம், திருமணத்தடை ஆகியவற்றிற்கு ஒரு நல்ல தீர்வாக அமைவதும் இந்த கோவில் தான். திடீர் பணக்காரர் யோகம், திடீர் அதிர்ஷ்டங்கள் உருவாவதும் இந்த கோவிலுக்கு சென்று வருவதால் தான். இந்தக் கோவிலுக்கு நாம் நினைத்தால் போக முடியாது. அந்த கடவுள் அழைத்தால் மட்டுமே நம்மலால் அங்கு செல்ல முடியும்.

லட்சக்கணக்கான மக்கள் சென்று வரக்கூடிய கோவில்களுள் இதுவும் ஒன்று. எனவே இந்த கோவிலுக்கு சென்று வந்தாலே போதும். அங்கு சென்று கூட்டத்தில் சாமியை பார்க்க முடியவில்லை என்று வருத்தம் கொள்ள தேவையில்லை. கோவிலில் நின்று கையெடுத்து கும்பிட்டாலே போதும், நாம் வேண்டியதை நிறைவேற்றிக் கொடுப்பார்.

ஐயப்பன் கோவிலுக்கு செல்லும் பொழுது அங்கு உள்ள 18 படிகளை ஏறினாலே சாமியை கண்டது போல எவ்வாறு உணர்கிறோமோ, அதனை போன்று தான் இந்த கோவிலுக்கு சென்று சுவாமியை காண முடியாவிட்டாலும், கையெடுத்து கும்பிட்டாலே நமக்கான பலன் நிச்சயம் கிடைக்கும்.

பஞ்சபூத ஸ்தலங்களில் வாய்வு ஸ்தலமாக இருக்கக்கூடிய இந்த கோவிலில், ஏற்றக்கூடிய தீபங்கள் அனைத்தும் மெதுவாகவும் அமைதியாகவும் எரியும். ஆனால் வாய்வு தீபம் மட்டும் ஆடிக்கொண்டே தகதக என்று எரியும். அத்தகைய சூட்சமம் கொண்ட கோவில்தான் இந்த கோவில்.

இந்த கோவிலின் மூலவரின் கவசங்களை கழற்றி எடுத்துவிட்டு, நேத்திர தரிசனம் என்று சொல்லக்கூடிய ஆரத்தி எடுக்கக்கூடிய சமயத்தில், லிங்கத்தின் அடியில் சிலந்தி வடிவமும், லிங்கத்தின் நடுவில் இரண்டு யானைகளின் தந்தமும், மேற்பகுதியில் ஐந்து தலை நாகத்தின் வடிவத்தையும், வலது பக்கத்தில் கண்ணப்பன் பெயர்த்து எடுத்த கண்ணின் வடிவத்தையும் காண முடியும்.

Exit mobile version