ரஷ்யாவிலிருந்து இந்தியாவிற்கு வந்த புதிய கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணமேயுள்ளது.கொரோனா பாதிக்கபடுபவர்கள் எண்ணிக்கையானது 3 லட்சத்துக்கு மேல் தற்போது பதிவாகி வருகிறது. கொரோனாவினால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இந்த அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.அந்த வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை வேகபடுத்தி உள்ளனர்.
இவ்வாறு அதிக அளவில் பொதுமக்கள் கொரோனா தடுப்பூசியை போட்டு வருவதால் அதற்கான தட்டுப்பாடும் நிலவி வருவதாக கூறப்படுகிறது. எனவே, நிலைமையை சமாளிக்க வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் ரஷ்யாவிலிருந்து கொரோனா தடுப்பூசி இந்தியா வந்துடைந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது கொரோனாவுக்கு எதிராக நன்றாக செயல்படுவதாக கருதப்படுகிறது. எனவே, இந்த தடுப்பூசியை வாங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியின் பலனாக, கடந்த 1 ஆம் தேதி ரஷியாவிலிருந்து 1½ லட்சம் ஸ்புட்னிக்-வி தடுப்பூசிகள் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த தடுப்பூசிக்கு மத்திய மருந்துகள் ஆய்வுக்கூடம் முறையான ஒப்புதல் அளித்தது. ரஷியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இந்த ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் விலையானது ரூ.948 மற்றும் 5 சதவீத ஜி.எஸ்.டி. என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி, ஐதராபாத்தில் ஒரு பயனாளிக்கு முதல் முறையாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியானது செலுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவில் தடுப்பூசிக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில் நேற்று ரஷ்யாவிலிருந்து ஸ்புட்னிக்-வி தடுப்பூசியின் 2-வது தொகுப்பு இந்தியாவுக்கு வந்து சேர்ந்தது. 60 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகள் கொண்ட இந்த தொகுப்பு ஐதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தது. விமானத்திலிருந்து தடுப்பூசி பெட்டிகள் இறக்கப்படும் புகைப்படமானது இணையதளங்களில் வெளியாகியுள்ளது.