Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

தொடர் தற்கொலைகளால் சிக்கி தவிக்கும் திமுக கூட்டணி கட்சி தலைவரின் எஸ்.ஆர்.எம் பல்கலைகழகம்

திமுக கூட்டணி கட்சி தலைவரான பாரி வேந்தரின் எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகத்தில் படித்து கொண்டிருந்த 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். பல கட்ட முயற்சிக்கு பிறகு பாரி வேந்தர் திமுக கூட்டணியில் இணைந்து தற்போது தான் எம்.பியாகியுள்ளார். இந்நிலையில் பல்கலை கழகத்தில் நடந்த தொடர் தற்கொலைகளுக்கான வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றியுள்ளது கடும் விமர்சனங்களை உண்டாக்கியுள்ளது.

பாரி வேந்தருக்கு சொந்தமான எஸ்.ஆர்.எம்.பல்கலை கழகம் காட்டாங்கொளத்தூர் அருகேயுள்ள பொத்தேரியில் இயங்கி வருகிறது. இப்பல்கலை கழகத்தில் பயிலும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது தொடர்கதையாகி வருகிறது. கடந்த மே 26ஆம் தேதி பொன்னேரியைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகள் அனுப்பிரியா தற்கொலை செய்து கொண்டார்.

அவரைத் தொடர்ந்து மே 27ஆம் தேதியே ஜார்கண்டைச் சேர்ந்த அனிஷ் சவுத்ரி என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து இரு மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டது கல்லூரி மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை பொது மக்கள் மத்தியில் மர்மத்தையும் ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து கல்லூரி நிர்வாகம் மீது தொடர்ந்து பொது மக்கள் சார்பாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன.

இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட இந்த மாணவர்கள் படிப்பில் பின் தங்கியிருந்ததாகவும், அதனால் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும் கல்லூரி நிர்வாகம் சார்பாக விளக்கமளிக்கப்பட்டது. இதனையடுத்து இச்சம்பவங்கள் குறித்து மறைமலைநகர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த சூழலில் மீண்டும் ஜூலை 15 ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த ஸ்ரீ ராகவ் என்ற பி.டெக் இறுதியாண்டு படிக்கும் மாணவர் பல்கலை கழகத்தில் உள்ள டெக்பார்க் கட்டிடத்தின் ஏழாவது மாடியில் இருந்து விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இவ்வாறு இரண்டு மாதங்களில் எஸ்.ஆர்.எம் பல்கலை கழகத்தில் பயிலும் மூன்று மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொண்டது குறித்து மறைமலை நகர் காவல் துறையினர், பல்கலை ஆசிரியர்கள், மாணவர்களின் நண்பர்கள் மற்றும் பெற்றோர்களிடம் தொடர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்த சூழலில் மாணவர்களின் தற்கொலை வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மர்மமாக இருக்கும் மாணவர்களின் தொடர் தற்கொலைகளுக்கான காரணம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

Exit mobile version