100 சதவீதம் தடுப்பூசி செலுத்திய மாநிலம்! எது தெரியுமா?
நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொற்றை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து பலக்கட்ட ஆலோசனைகளுக்கு பிறகு சில கட்டுப்பாடுகளையும் விதித்து வருகின்றன.
அந்த வகையில் தொற்றை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. அதை தொடர்ந்து வாரத்தின் இறுதி நாள் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணியும் துரிதமாக நடந்து வருகிறது.
அந்த வகையில் கேரளாவிலும் கொரோனா பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அங்கு தினசரி இந்த தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி வேகத்தில் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக அந்த மாநிலத்தில் தினசரி பாதிப்பு நாற்பதாயிரத்தை கடந்து சென்று கொண்டிருப்பதாக தகவல் தெரிவிக்கிறது.
நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த முடியாமல் கேரள அரசு திணறி வருகிறது. இதனால் கடுமையான கட்டுப்பாடுகளை அந்த மாநிலத்தில் அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவில் கொரோனாவின் 3-வது அலையின் தாக்கம் மிகவும் மோசமாக உள்ளது. இதன் காரணமாக பதிப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. எனவே இந்த சூழ்நிலையில் மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அந்த மாநில மக்களை அறிவுறுத்தியுள்ளது.
இந்த நிலையில், கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள தனது டிவிட்டர் பதிவில், கேரள மாநிலத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 100 சதவிகிதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், 83 சதவிகிதம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகளும் செலுத்தி உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.