புதிதாக வாகனம் வாங்குபவர்கள் தங்கள் வாகனங்களுக்கு தங்கள் விருப்பமான பதிவு எண்ணை பெறுவதற்காக, அவா்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் வாகன உரிமையாளா்கள் தங்கள் வாகனங்களுக்கு விரும்பும் பதிவு எண்ணை வழங்குவதற்கு அதிகாரிகள் கட்டணம் வசூலிக்க அதிகாரம் அளித்து, கடந்த 1994-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன விதி 55ஏ என்கிற சட்டத்தை உருவாக்கியது. இதனைத்தொடர்ந்து அம்மாநில உயா்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. இதற்கு எதிா்ப்பு தெரிவித்து மாநில அரசு சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வர ராவ், ரவீந்திர பட் ஆகியோா், சில சேவைகளுக்காக கட்டணம் வசூலிக்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் உள்ளது. அந்த வகையில், விருப்பமான வாகன பதிவு எண்களை வழங்கும் இந்த தனித்துவமான சேவைக்கும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வசூலிக்க மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது. எனவே இதுதொடா்பாக மத்திய பிரதேச உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்துள்ளனர்.