தமிழுக்கு பெருமை சேர்க்கும் வகையிலான செம்மொழி மாநாடு குறித்து அறிக்கை – முதல்வர் ஸ்டாலின்!!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் ஓர் முக்கிய அறிக்கையினை வெளியிட்டுள்ளார். அதில், மகாகவி பாரதியார் கனவான வெளிநாட்டு நல்லறிஞர்களின் சாத்திரங்கள் அனைத்தும் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் என்பதை நனவாக்கும் வகையில் வேளாண்மை, தொழில்நுட்பம், அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் பல்வேறு துறை சார்ந்த நூல்களை தமிழில் மொழிப்பெயர்க்கும் பணிகள் நடந்து வருகிறது. அதேபோல், செயற்கை நுண்ணறிவினை புகழ்பெறும் வண்ணம் தமிழ் செம்மொழி மாநாடு நடத்தியதும் திமுகவின் தமிழை உயிர்ப்போடு வளர்த்தெடுக்கும் முயற்சி ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ‘கோவில்களில் தமிழ்வழியில் வழிபாட்டு முறையினை கொண்டுவருதல், பன்னாட்டு புத்தக கண்காட்சி நடத்தியது, அரசு பணியில் தமிழ்வழியில் படித்து முடித்த மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்குவது, உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை ஒன்றிணைத்து அவர்களின் பங்களிப்பு அங்கீகரிக்கும் நோக்கில் ஜனவரி 12ம் தேதியினை அயலக தமிழர் தினமென்று என்று அறிவித்து மாநாட்டினை வெற்றிகரமாக நடத்தி முடித்தது உள்ளிட்ட தமிழை மேம்படுத்தும் பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், முதல் உலக தமிழ் செம்மொழி மாநாடு கோவை மாநகரில் நடைபெற்ற நிலையில்,தமிழ் மொழிக்கு பெருமை சேர்க்கும் வகையில் வரும் 2025ம் ஆண்டு ஜூன் மாதம் 2ம் உலக தமிழ் செம்மொழி மாநாடு சென்னையில் பிரம்மாண்டமாக சீரோடும் சிறப்போடும் நடைபெறும் என்று அந்த அறிக்கையில் அவர் அறிவித்துள்ளார்.